நீர்வை தி.மயூரகிரி (இயற்பெயர்: பிரம்மஸ்ரீ தியாக. மயூரகிரிக் குருக்கள்). நீர்வேலி: செல்லக்கதிர்காம ஸ்வாமி தேவஸ்தானம், 1வது பதிப்பு, 2017. (யாழ்ப்பாணம்: ஷாம்பவி பதிப்பகம், நீர்வேலி).
iv, 78 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12 சமீ., ISBN: 978-955-38411-1-7.
இலங்கையில் பாடல்பெற்ற திருத்தலங்களில் முருகப் பெருமான் எழுந்தருளியிருக்கும் கதிர்காமமும் ஒன்றாகும். பல நூற்றாண்டுகளாக அடியார்கள் பாதயாத்திரை மூலம் சென்று கதிர்காமக் கந்தனைத் தரிசித்து வந்தார்கள். நூற்றுக்கணக்கான மைல்களை வாரக் கணக்காக பாத யாத்திரை மூலம் கடந்து சென்று கதிர்காமக் கந்தனையே தம் மனத்திலிருத்தி அடியார்கள் வழிபாடு செய்து திரும்புவார்கள். நீர்வையூரின் மத்தியில் வாழ்ந்திருந்து துறவறம் மேற்கொண்ட இரு தபஸ்வினிகள் அடிக்கடி யாத்திரையில் ஈடுபட்டார்கள். அவர்களுள் ஒருவர் செல்லாச்சி அம்மையார். மற்றவர் சின்னாச்சி அம்மையார் அவ்விருவரும் கதிர்காமத்திலிருந்து தாம் கொண்டுவந்த வேல் ஒன்றினைத் தாம் வாழ்ந்திருந்த குடிசையின் பக்கத்திலுள்ள கொட்டிலில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார்கள். கதிர்காம உற்சவ காலங்களில் அங்கு செல்ல முடியாதவர்கள் அங்கிருந்து கொண்டுவந்த இந்த வேலைத் தரிசித்து மனநிறைவும் அருளாசியும் பெற்றார்கள். சிறிது சிறிதாக இத்தலம் அன்பர்களையும் ஆதரவாளர்களையும் தன்பாற்கவர்ந்தது. காலகதியில் ‘செல்லக் கதிர்காமம்’ எனச் சிறப்பாக நேசிக்கப்பட்டு வந்தது. தவஸ்வினிகள் இருவரும் இத்தலத்தினை சிறப்புற அமைக்க, ஊர்தோறும் பாத யாத்திரை மூலம் சென்று நிதி பெற்றனர். இங்கு கிடைத்த காணிக்கையையும் தமது பொருளையும் சேர்த்து 1936ஆம் ஆண்டு ஆகம விதிப்படியான ஓர் ஆலயத்தை புதிதாகவும் சிறப்பாகவும் அமைத்தனர். 1936ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. நீர்வேலி சிவஸ்ரீ க.தியாகராஜக் குருக்கள் (வியாபாரி ஐயர்) அக்காலத்திலிருந்து செல்லக் கதிர்காமசுவாமி கோயிற் பூசகராகத் தொண்டாற்றிவந்தார். 1985ஆம் ஆண்டு மீண்டும் இவ்வாலய கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இவ்வாலயத்தில் ஆனிப் பூரணையை தீர்த்தத் திருவிழாவாக வைத்து கொடியேற்றமும் அதனைத் தொடர்ந்து 15 நாட்கள் திருவிழா நடைபெற்று தீர்த்தத் திருவிழாவும் திருக்கல்யாணமும் நடைபெற்று வருகின்றது. கந்தசஷ்டி உற்சவமும் நடைபெறுகின்றது. இன்னும் கதிர்காம உற்சவத்தின்போது விசேட அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுவதோடு நவராத்திரி, திருவெம்பாவை ஆகியன சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகின்றது. 2001ம் ஆண்டு கொடித்தம்பம் நிறுவப்பட்டு மகோற்
சவம் நடைபெற்றது. நூற்றாண்டை முன்னிட்டு 2017இல் இக்கோவில் வரலாற்றைப் பதிவுசெய்யும் இவ்வாவணம் வெளியிடப்பட்டுள்ளது.