மு.தியாகராசா. கொழும்பு: சிவத்திரு மன்றம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2002. (கொழும்பு 6: டெக்னோ பிறின்ட், 581, 2/1, காலி வீதி, வெள்ளவத்தை).
24 பக்கம், விலை: ரூபா 30.00, அளவு: 21×14 சமீ.
முப்பெரும் சிவபுராணங்களில் பிரபல்யமாக விளங்குவது கந்தபுராணம். வருடாவருடம் ஈழத்துத் திருக்கோயில்களில் கந்தபுராண படனம் முழுமையாக நிகழ்வதுண்டு. பெரும்பாலான கோயில்கள் மடாலயங்கள் ஆகியவற்றில் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி அனுஷ்டிக்கப்படும் ஆறு தினங்களிலும் சூரபன்மன் வதைப்படலம் முழுவதும் புராண படனம் செய்யப்படுவதுண்டு. இப்படலத்தில் சூரபன்மனுக்கு ஆறுமுகப் பெருமான் தன்னுடைய விஸ்வரூபம் எனப்படும் திருப்பெருவடிவத்தைக் காட்டும் பகுதி மிகச் சிறந்த நிலையில் வைத்து எண்ணப்படும். அப்பகுதி ஆறுமுகப் பெருமான் கொண்ட அண்ட கூடங்களையெல்லாம் கடந்து அவற்றை உள்ளடக்கிக் கண்டவர்கள் வியப்புற நின்ற மகா பிரமாண்டமான தோற்றத்தையும், சூரனுக்குப் பெருமான் மெய்ஞ்ஞானம் சிறிது நல்;க, அவனது மனநிலை மாற அவன் நடந்துகொண்ட நிலைகளையும், ஞானத்தை நீக்கியதும் அவன் ஆணவ மயக்கத்தால் நடத்திய செயற்பாடுகளையும் கச்சியப்ப சிவாச்சாரிய சுவாமிகள் சுவைமிக்க பாடல்களால் அமைத்திருக்கிறார். புராண ஆர்வலர்கள் அப்பாடல்களின் சிறப்பை அறிந்து கொள்ளுவதற்கு ஏற்றதாக ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபரான புராணவித்தகர், வண்ணார்பண்ணை மு.தியாகராசா அவர்கள், பாடல்களுக்குப் பொருள் விளக்கம் தவறாது பதவுரை அமைத்துள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் Pam-2119).