ச.வயித்தியலிங்கபிள்ளை (உரையாசிரியர்), தி.செல்வமனோகரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, மீள்பதிப்பு, ஓகஸ்ட் 2018, 2வது பதிப்பு, 1955. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
xviii, 188 பக்கம், விலை: ரூபா 550., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-9233-55-8.
சைவத்தமிழ்க் காப்பிய மரபில் கந்தபுராணத்துக்குத் தனியிடமுண்டு. கச்சியப்ப சிவாச்சாரியார் என்ற ஆளுமையால் உருவாக்கப்பட்ட இக்காப்பியம் முருக வழிபாட்டின் எழுச்சிக்கும் அது சிவசம்பந்தத்தைப் பெற்று சைவமரபுக்கு உட்படவும் காரணமாயிற்று. புராண, காவியப் பண்புகளை ஒருங்கே கொண்ட இந்நூல் வாய்மொழி மரபிலும் ஏட்டு மரபிலும் பேணப்பட்டு வந்துள்ளது. புராணபடனம், பிரசங்கம், யாழ்ப்பாணச்சுருட்டுக் கொட்டில்களில் நிகழ்த்தப்பட்ட புராண வாசிப்பு, திண்ணைக் கல்வி மரபில் பெற்ற செல்வாக்கு, கூத்து மரபு எனப் பல்வேறு தளங்களிலான இந்நூலின் இயங்கியலானது சைவ மரபு ஈழத்தில் நின்று நிலவ முக்கிய காரணமாயிற்று. நாவலரின் வருகையுடன் ஏட்டுருவிலிருந்த இக்காப்பியம் அச்சுவாகனமேற்றப்பெற்றது. உரைநடையில் எழுதப்பட்டு மக்கள்மயமாகியது. இப்புராணத்தின் தேவ காண்டத்தில் இடம்பெறும் ஒரு படலமே தெய்வானையம்மை படலமாகும். இது 268 செய்யுள்களைக் கொண்டது. இந்திரன் மகளான தெய்வானையம்மை எனும் கிரியா சக்தியை முருகனாகிய பதி கைத்தலம் பற்றும் நிகழ்வை இப்படலம் கூறிநிற்கின்றது. உண்மையான பக்திமை ஒருவரை மேனிலையாக்கம் பெறச்செய்ய உதவும் என்பதை இப்படலம் உணர்த்திநிற்கிறது. இப்படலத்துக்கு யாழ்ப்பாணத்து வல்வெட்டித்துறை ச.வயித்தியலிங்கபிள்ளை (கி.பி. 1843-கி.பி.1900) எழுதிய விரிவான உரையே இந்நூலாகும். முதற்பதிப்பு வெளிவந்த காலம் அறியமுடியவில்லை.