குமரகுருபர சுவாமிகள் (மூலம்), நா.ஏகாம்பரம் (உரையாசிரியர்), சி.சிவலிங்கராஜா (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்துப் பண்பாட்டு நிதியம், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, மீள்பதிப்பு, ஓகஸ்ட் 2018, 1வது பதிப்பு, 1955. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39ஃ2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
xviii, 58 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-9233-61-9.
குமரகுருபரர் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெருந் தமிழ்ப் புலவராவார். இவர் தமிழ்நாட்டுத் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர். பிறவியில் ஊமையாகப் பிறந்த இவருக்கு ஐந்து வயதுக்குப் பின்னரே பேசும் திறன் அமைந்தது என்பர். கந்தர் கலி வெண்பா, கயிலைக் கலம்பகம் ஆகிய நூல்களை இயற்றிய குமரகுருபரர் மதுரையில் இருந்து அரசு புரிந்த திருமலை நாயக்கரின் வேண்டுகோளுக்கு இணங்க மதுரை மீனாட்சி அம்மன் பெயரில் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்னும் நூலையும் இயற்றினார். குமரகுருபரர் இயற்றிய கந்தர் கலி வெண்பா திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள சண்முகப் பெருமான் மீது கலிவெண்பா என்னும் பாவடிவத்தில் பாடப்பெற்றது. இச்செய்யுள் 122 கண்ணிகளைக் கொண்டது. சிவபெருமானின் சொரூபலட்ஷணம் முதலாகிய சைவசித்தாந்த நுட்பங்களையும், முருகப்பெருமானின் சொரூபநிலையையும் அவரின் திருமுகங்களின் செயல்களையும், அவரின் திருக்கரங்களின் செயல்களையும், அவரின் அலங்காரத்தையும், அவர் பற்பல உருவாய் விளங்கும் தன்மையையும், அவரின் திரு அவதாரத்தையும், அவரின் திருவிளையாடல்களையும், அவர் எழுந்தருளியிருக்கும் திருப்பதிகளையும் அவர் அடியார்களின் வேண்டுகோள்களையும் தன்னகத்தே கொண்டு மிளிர்வது. கந்தபுராணச் சரித்திரத்தைச் சுருக்கமாகக் கூறுவது. இலக்கியச் சுவையையும் பக்திச் சுவையையும் ஒருங்கே கொண்டு ஓதுவோரின் நெஞ்சை நெக்குருகச் செய்வது.
இந்நூலின் மீளச்சு 2018இல் மலேசிய திருமுருகன் திருவாக்கு திருபீடத்தின் நான்காவது அனைத்துலக முருகபக்தி மாநாட்டினையொட்டி கொழும்பில் வெளிவந்துள்ளது.