13236 திருமுருகாற்றுப்படை: ஆறுமுகநாவலர் உரை.

நக்கீர தேவர் (மூலம்), ஆறுமுக நாவலர் (உரையாசிரியர்), ஸ்ரீ பிரசாந்தன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 4:  இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

xiv, 214 பக்கம், தகடுகள், விலை: ரூபா 400., அளவு: 23×15 சமீ., ISBN: 978-955-9233-34-3.

மதுரைக் கடைச்சங்கத்து மகாவித்துவானாகிய நக்கீரதேவர் அருளிச்செய்தது திருமுருகாற்றுப்படை. இது பத்துப்பாட்டிலுள்ள மற்றைய ஆற்றுப்படைகளினின்றும் வேறுபட்ட தனிச் சிறப்பினையுடையது. அவற்றைப் போன்று ஆற்றுப்படுத்தப்பட்டார் பெயரால் வழங்காமல், பாட்டுடைத் தலைவன் பெயரால் விளங்குகின்றது. அத்துடன், ஆற்றுப்படையின் நோக்கத்தையே மாற்றி, அவ்வகை நூல்களுக்குப் புதியதோர் மேம்பாட்டை உண்டாக்கிய பெருமை வாய்ந்தது. மேலும் பாட்டுடைத் தெய்வத்தின் பெயரால் வழங்கி, வீடுபேறு அடைவதற்குச் சமைந்தவர் ஒருவரை அத்தெய்வத்தின்பால் ஆற்றுப்படுத்துதலால் பத்துப்பாட்டிற்குக் கடவுள் வாழ்த்தாகக் கொள்ளத்தக்க மாண்புடன் விளங்குகின்றது. பாட்டுடைத் தலைவன் திருமுருகன். ஆற்றுப்படுத்தப்பட்டவன் அத்தெய்வத்தின் அருள் பெறுதற்குரிய புலவன். இக்காரணம் பற்றியே பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படை முதலில் வைக்கப்பட்டது என்றும் கருதப்படுகின்றது, பெரும்பான்மையும் நச்சினார்க்கினியர் உரைக் கருத்தைத் தழுவி யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் செய்த உரை இது. இந்நூலில் திருமுருகாற்றுப்படை, அதற்கு எழுதப்பட்ட நாவலர் உரை என்பன இடம்பெற்றுள்ளன. பின்னிணைப்புகளாக நச்சினார்க்கினியர் உரையும், நாவலர் உரைநெறி பற்றிய இரா.வை.கனகரத்தினம் அவர்களின் கட்டுரையும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்