தனபாலசிங்கம் கிருஷ்ணமோகன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
52 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-626-7.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2018ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 26ஆம் திகதி எவ்வித முன்னறிவித்தலும் இன்றி ரணில் விக்கிரமசிங்க அவர்களைப் பிரதம மந்திரி பதவியிலிருந்து நீக்கியதுடன், அரசியல் எதிரியாக அதுவரை அவரால் கருதப்பட்ட மகிந்த இராஜபக்ஷ அவர்களைப் பிரதம மந்திரியாக நியமனம் செய்தார். இதன் உச்சகட்டச் செயலாக 2018ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 09ஆம் திகதி பாராளுமன்றத்தினையும் கலைத்துத் தேர்தலுக்கான திகதியையும் அறிவித்திருந்தார். இவ்வாறு அரசியலமப்புக்கு மாறாகச் செயற்பட்டமை மூலம் அரசியலமைப்புரீதியான வன்முறையினை ஜனாதிபதி புரிந்து நாட்டின் சட்டவாட்சிக்குச் சவால் விடுத்தார் எனவும் மக்கள் இறைமை, வலுவேறாக்கம், அடிப்படையுரிமைகள் போன்றவற்றிற்கு சவால் விடுத்து, உறுதியற்ற அரசியல் நிலைமையினை நாட்டில் உருவாக்கினார் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டார். அரசியல் உறுதியற்ற இந் நெருக்கடி நிலையிலிருந்து நாட்டினை நீதிமன்றமே பாதுகாத்தது. உயர்நீதிமன்றம் சட்டவாட்சியையும், மக்கள் இறைமையையும் பாதுகாத்ததுடன், சட்டமே உயர்ந்தது என்பதையும், சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை என்பதையும் உறுதிப்படுத்தியது. 2018ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் தொடக்கம் மார்கழி மாதம் வரை இலங்கையில் நிலவிய இத்தகைய அசாதாரண அரசியல் நெருக்கடி நிலை குறித்து தர்க்கரீதியாக இத்தனிவரைபு நூல் விவாதிக்கின்றது. நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தையும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதுதத்துவமாணிப் பட்டத்தையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக 1989-1993 காலகட்டத்தில் பணியாற்றிய இவர் தற்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானங்கள் துறையில் அரசியல் விஞ்ஞான கற்கைநெறி முதுநிலை விரிவுரையாளராகக் கடமையாற்றுகின்றார்.