ப.புஷ்பரட்ணம். சுவிட்சர்லாந்து: தமிழ்க் கல்விச் சேவை, 1வது பதிப்பு, 2017. (மலேசியா: உமா பதிப்பகம்).
xv, 216 பக்கம், வண்ணப் புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×30 சமீ., ISBN: 978-3-906871-16-5.
சுவிஸ் நாட்டில் உள்ள புலம்பெயர்ந்த தமிழ் மாணவர்களின் மொழியறிவையும் கல்வியறிவையும் வளர்க்கும் பொருட்டு அரசாங்கப் பாடசாலைகளில் கிட்டத்தட்ட 110 ஆசிரியர்களும் தனிப்பட்ட ரீதியாக செயற்படும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில் தமிழ்க் கல்விச் சேவையினர் ‘இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு’ மற்றும் ‘ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள்’ ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளனர். இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து ஈழத்தமிழரின் மறைந்து போகும் மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாத்து, ஆவணப்படுத்துவது தொடர்பாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. மரபுரிமை என்பது ஒவ்வொரு இனக் குழுமத்தினதும் தனித்துவத்தை அடையாளப்படுத்திக் காட்டும் விலைமதிப்பற்ற சொத்தாகும். மேலும் மரபுரிமை என்பது, கடந்தகாலச் சமூகத்திடம் இருந்து பெறப்பட்டதும், தொடர்ந்து பினபற்றப்படுவதும், எதிர்காலச் சந்ததியினருக்கு அவற்றை பாதுகாத்து வழங்கப்பட வேண்டியதையும் குறிப்பதாகும். இது இயற்கை மரபுரிமை, கலாசார மரபுரிமை, தொட்டுணரக்கூடிய மரபுரிமை, தொட்டுணர முடியாத மரபுரிமை, அசையும் மரபுரிமை, அசையா மரபுரிமை எனப் பலவகைப்படும். அவ்வகையில் இந்நூலில் பாரம்பரிய குடியிருப்புகளும் வீட்டுப் பாவனைப் பொருட்களும், பாரம்பரிய அடுக்களைகளும் பாவனைப் பொருட்களும், பாரம்பரிய உணவு வகைகள், பாரம்பரிய வேலிகள், பாரம்பரிய இசைக் கருவிகளும் கலைவடிவங்களும், பாரம்பரிய திருமணம், பாரம்பரிய பூப்பனித நீராட்டுவிழா, பாரம்பரிய மரணச் சடங்குகள், பாரம்பரிய சடங்குகள், பாரம்பரிய தொழில்கள், பாரம்பரிய விவசாயம், கல்விப் பாரம்பரியம், பாரம்பரிய கள் உற்பத்தி, பாரம்பரிய உடைகள், பாரம்பரிய விளையாட்டு, பாரம்பரிய போக்குவரத்து, பாரம்பரிய மீன்பிடி ஆகிய பிரிவுகளின் கீழ் இவை தெளிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் புஷ்பரட்ணம் அவர்களால் தொகுக்கப்பட்ட புகைப்பட ஆவணத் தொகுப்பு இதுவாகும்.