பீற்றர் பெர்சிவல் (மூலம்). விருபா குமரேசன், அ.சிவஞானசீலன் (பதிப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).
xl, 910 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26.5×19 சமீ., ISBN: 978-955-7331-05-8.
ஹாட்லி கல்லூரியின் நிறுவனர்களில் ஒருவராகிய வண. பீற்றர் பேர்சிவல் அவர்களால் 1843 இல் வெளியிடப்பட்ட திருட்டாந்த சங்கிரகம் ((A collection of proverbs in Tamil with their translation in English) என்ற பெயருடைய தமிழ்ப் பழமொழிகளின் தொகுப்பு நூலினையும், பின்னர் 1874 இல் சென்னையில் வைத்து வண. பீற்றர் பேர்சிவல் அவர்களால் வெளியிடப்பட்ட Tamil Proverbs with their English Translation என்ற சென்னைப் பதிப்பையும் ஒருங்கிணைத்துச் செவ்விதாக்கம் செய்யப்பட்ட புதிய பதிப்பாக ‘பேர்சிவல் பாதிரியாரால் தொகுத்து வெளியிடப்பட்ட தமிழ்ப் பழமொழிகள்’ என்ற பெயரில் இந்நூல் மீள்பதிப்புச் செய்யப்பட்டுள்ளது. ஈழத்து அறிஞர்களால் உருவாக்கப்பட்ட அகராதிகள் அனைத்தையும் ஈழத்தில் மீளவும் கிடைக்கச் செய்யவேண்டும் என்ற நோக்கத்தின் நீட்சியாக ஈழத்தில் வாழ்ந்து தமிழ்ப்பணிசெய்த மேலைநாட்டினரின் தொகுப்பு நூல்களையும் மீளவும் பதிப்பிக்கலாம் என்பதற்கிணங்க வண. பீற்றர் பேர்சிவல் அவர்களின் பழமொழி நூல்களிரண்டினையும் ஒன்றிணைத்துப் பதிப்பித்துள்ளனர். வண. பீற்றர் பேர்சிவல் அவர்கள் 1826-1851 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட 25 ஆண்டுகளில் 22 ஆண்டுகள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பணிபுரிந்துள்ளார். இரண்டு பதிப்புகளையும் ஒன்றிணைத்து இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளமையால் புதிய செய்திகள் பல வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ஈழமும் தமிழகமும் கடலாற் பிரிக்கப்பட்டிருக்கும் இரு தமிழர் நிலங்கள். தமிழ் தாய்மொழியாக இருந்தாலும் இரண்டு இடங்களிலும் வெவ்வேறு வழக்காறுகளும், உச்சரிப்புகளும் காணப்படுகின்றன. பேர்சிவல் பாதிரியாரின் 1843 ஆம் ஆண்டுப் பதிப்பானது யாழ்ப்பாணத்துப் பதிப்பாகவும், 1874ஆம் ஆண்டுப் பதிப்பானது தமிழகத்துப் பதிப்பாகவும், அந்நிலங்களின் முதற் பதிப்புகளாகவும் குறிப்பிடப்பட்டு இருப்பதனால் இரு பதிப்புகளையும் ஒன்றிணைத்துப் பார்க்கும்போது 150 ஆண்டுகளுக்கு முன்னர் இரு தமிழ் நிலங்களிலும் நிலவிய வழக்காறுகளையும் ஒரே பார்வையில் அறிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைக்கின்றது. முதற்பதிப்பில் தரப்பட்டிருந்த 1870 பழமொழிகளில் இருந்து 1765 பழமொழிகளுக்கு இரண்டாம் பதிப்பில் புதிய ஆங்கில மொழிபெயர்ப்பினை பேர்சிவல் பாதிரியார் செய்துள்ளார். இந்நூலில் இருவேறுவிதமான மொழிபெயர்ப்புகளையும் ஒருங்கே பார்க்க முடிகின்றது.