தா.சனாதனன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xxiv, 208 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 1200., அளவு: 24×17.5 சமீ., ISBN: 978-955-659-619-9.
இக் கலை வரலாற்று எழுத்து முயற்சியானது, யாழ்ப்பாணத்தில் காலனியவாத மற்றும், தேசியவாத முரண்பாட்டின் பின்னணியில் உருவான நவீனமயமாதல் படிமுறையில் காண்பிய வடிவத்தில் நிகழ்ந்த பல தள அர்த்த, அடையாள மற்றும் அழகியல் மாற்றங்களைத் திரைவிலக்க முயல்கின்றது. காண்பியக் கலை பற்றிக் கருத்துருவ நிலையில் நிகழ்ந்த மாற்றங்களைக் கலைப்படைப்பு, படைப்பாளி, கலைக்கல்வி, காண்பியக் கலைசார் எழுத்துக்கள், கலந்துரையாடல்கள், காண்பியக் காட்சிகள், கலை நிறுவனங்கள் என்பவற்றுடன் தொடர்புபடுத்தி வாசிக்க முயல்கிறது. அதற்கேற்ப இந்நூலின் இயல்கள் மரபும் நவீனத்துவமும் குலத்தொழிலாகக் கலையும், நவீனத்துவமும் மாயக்காட்சி வாதமும், காலனியமும் தேசியமும் காண்பியக் கலை பற்றிய கருத்தாடற் புலமும், கலைப்பயில்வும் அரச உத்தியோகமும்: நடுத்தர வர்க்கமும் ஓவியத்தின் கருத்துரு மாற்றமும், நவவேட்கையும் உருவவாதமும், முடிவுரை ஆகிய ஆறு தலைப்புகளில் வகுக்கப்பட்டுள்ளன. தாமோதரம்பிள்ளை சனாதனன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறையில் கலை வரலாற்று விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார். இவர் தில்லிப் பல்கலைக்கழகத்தில் ஓவியத்தில் நுண்கலைமாணி மற்றும் முதுமாணிப் பட்டங்களையும், புது தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கலை வரலாற்றுத்துறையில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றவர்.