வடிவேல் இன்பமோகன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xvi, 178 பக்கம், வண்ணப்படங்கள், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-642-7.
இந்நூல் நான்கு அடிப்படைகளிலே நுண்கலை பற்றிய அறிமுகத்தை விபரிக்கின்றது. முதலில் ஓவியக்கலை, சிற்பக்கலை, கட்டடக்கலை, நாடகம், இசை, நடனம், தொழில்நுட்பக் கலைகள் முதலான கலைகள் பற்றிய ஓர் அடிப்படையான விளக்கத்தைத் தருகின்றது. இரண்டாவதாக அழகியல் பற்றிய எண்ணக்கருக்கள், கலைக்கும் பண்பாட்டுக்குமான தொடர்பு, கலைக்கும் சமூகத்துக்குமான தொடர்பு ஆகியன பற்றி விளக்குகின்றது. மூன்றாவதாக இந்திய, இலங்கை நுண்கலைகளை, குறிப்பாக, கட்டட, சிற்ப, ஓவியக் கலைகளின் பண்புகளை ஒப்பீட்டு அடிப்படையில் விளக்குகின்றது. நான்காவதாக மேலைநாட்டு கலை வரலாற்றையும் சமகால கலைப்போக்குகளையும் விபரிக்கின்றது. நுண்கலைகளும் அவற்றின் அறிமுகமும், ஓவியக்கலை, சிற்பக்கலை, கட்டடக்கலை, நாடகம், இசை மற்றும் நடனக் கலைகள், கைவினை பாரம்பரியம், தொழில்நுட்பக் கலைகள் (விளக்கப் படங்கள்), அழகியல் பற்றிய எண்ணக்கருக்கள், கலையும் பண்பாடும், கலையும் சமூகமும், இந்திய-இலங்கை நுண்கலைகள், மேலைநாட்டு கலை வரலாறும் சமகாலக் கலைப் போக்குகளும் ஆகிய பன்னிரண்டு அத்தியாயங்களையும் 42 வர்ணப் படங்களையும் கொண்ட இந்நூல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டுமன்றி, பாடசாலை மாணவர்களுக்கும் மிகவும் பயன்மிக்கதாய் அமைகின்றது. தனது இளமாணிக் கற்கையை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்த இன்பமோகன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா அவர்களின் வழிகாட்டலில் முதுதத்துவமாணிப் பட்டத்தையும் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டவர். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார்.