விவேகானந்தனூர் சதீஸ் (இயற்பெயர்: செ.சதீஸ்குமார்). கிளிநொச்சி: கவியாலயா வெளியீட்டகம், இல. 177, விவேகானந்த நகர் கிழக்கு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2017. (யாழ்ப்பாணம்: தேவி பிரின்டர்ஸ்).
xviii, 83 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 18×12 சமீ., ISBN: 978-955-38482-1-5.
சிறைக்குள் இருந்தவாறு சிங்களச் சகோதரர்களுக்கு எதைச் சொல்லலாம்? உறக்கம் கலைந்தொரு விடிகாலைப் பொழுதில் அர்த்தம் பொதிந்த கேள்வி ஒன்றை மனது இக்கவிஞனிடம் கேட்டது. அதன் விளைவாக முளைத்த வரிகளே இக்கவிதைகளின் நதிமூலம். இவற்றை ‘வலி சுமந்த வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட கிறுக்கல்கள். கழிவுத்தாளில் கடித உறை செய்து சோற்றுப் பருக்கையில் ஒட்டிக் களவாக அனுப்பிய ஆக்கங்கள்’ என்று சிறைக்கம்பிகளைத் தாண்டி வெளிவந்த பாதையை கவிஞர் கூறுகையிலேயே, இக்கவிதைகளுக்குத் தனிப் பெறுமதி வந்துவிடுகின்றது. ‘இத்தொகுப்பில் அடக்கப்பட்டுள்ள அறுபது கவிதைகளும் அனைவருக்கும் பிடிக்கும் என்று சொல்லவில்லை. நிச்சயம் சில குற்றம் குறைகள் இருக்கும். ஏனெனில் எனக்கு ஓசை, நயம், பாவம் சொல்லித்தர நானிருந்த சிறையில் யாரும் இருக்கவில்லை. ஆயுள் தண்டனையளிக்கப்பட்ட அரசியல் கைதியாக சதா அதனையே எண்ணியெண்ணிச் சிதைத்துக் கொள்ளாது என்னை நானே ஆற்றுப்படுத்த ஆரம்பித்ததின் விளைவுதான் எனது அனுபவ இலக்கியம்’ என்கிறார் விவேகானந்தனூர் சதீஸ்.