13689 தலைவர்கள் வாழ்க மாதோ: கவிதைகள்.

தான்தோன்றிக் கவிராயர் (இயற்பெயர்: சில்லையூர் செல்வராஜன்). பாரிஸ்: ரஜனி பதிப்பகம், 11, Rue Rachier, 1வது பதிப்பு, பெப்ரவரி 1992. (பாரிஸ்: ரஜனி பதிப்பகம்).

(8), 51 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17×11.5 சமீ.

சில்லையூர் செல்வராசன் (25.01.1933-14.10.1995) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர். கவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை, நாடகம், வானொலி நாடகம், மொழிபெயர்ப்பு, விளம்பரம் எனப் பரவலான பங்களிப்புச் செய்தவர். தான் பிறந்த சில்லாலை ஊரின் பெயரை முதல் நிலைப்படுத்தி தனது பெயரை சில்லையூர் செல்வராசன் எனச் சூடிக்கொண்டார். யாழ்ப்பாணச் சாதி முறைக்கு எதிராக புதிய வர்க்க பேதமற்ற சமுதாயத்தை உருவாக்க அங்கதக் கவிதையால் எடுத்தியம்பியவர் இவர். சமுதாய அடக்குமுறைக்கு, அநியாயங்களுக்கு, மூடக் கொள்கைகளுக்கு எதிராக அவற்றை ஒழித்துக்கட்ட கவிதையால் சாடினார். அவரது அங்கதக் கவிதைகள் புதுமைக் கருத்தை இலக்கியத்தில் புகுத்தின. ‘தலைவர்கள் வாழ்க மாதோ’ என்ற இந்த அங்கதக் கவிதை நூல் மூலம் அரசியல் தலைவர்களை சில்லையூரான் சாடியுள்ளார். இதில் ஓரு அறிமுகக் குறிப்பு (சில்லையூர் செல்வராஜன்), அவர் ஒரு இமயம் (எஸ்.எஸ்.குகநாதன்), தோற்றுவாய் ஆகிய ஆரம்பப் பகுதிகளைத் தொடர்ந்து பண்டார ராமாயணம், மாற்றிழந்த மருந்தின் மதிப்புயர்த்தும் விளம்பரம், புதுமுறைப் பாலர் பாடல், டட்லிப் பிள்ளையார் பதிகம், சாராய ரசாயன சாஸ்திரி தஹநாயக்கா, பாரதத்து நற்றலைவன் பாபு பிரசாத் வாழ்க, விகாரைமகாதேவி விமலா, என்.எம்.பெருமையினை என்னென்றியம்பிடுவேன், ஈழத்துக் காந்தித் தாத்தா, இன்ப நாயகனே ஹண்டி இக்கதி உனக்கு ஆமோ ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட அங்கதக் கவிதைகளை இந்நூல் கொண்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 002604).

ஏனைய பதிவுகள்