தம்பிலுவில் ஜெகா. தம்பிலுவில் 2: பொதிகை வெளியீடு, 1வது பதிப்பு, 2015. (தம்பிலுவில்: எம்.ஆர்.எஸ். ஓப்செட் அச்சகம்).
100 பக்கம், விலை: ரூபா 240., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-41466-0-0.
1980 முதல் பத்திரிகைகளில் கவிதைகளை எழுதிவரும் தம்பிலுவில் ஜெகாவின் 75 கவிதைகள் அடங்கிய தொகுப்பு. பெரும்பான்மையானவை மரபுக் கவிதைகளாக உள்ளன. சிறுவர் நலம், தாயன்பு, தமிழின் மகிமை, ஆண் அடக்குமுறைக்கு எதிர்ப்புக் குரல், இனரீதியான துன்புறுத்தல்கள், கடமை உணர்வு, சிறுமை கண்டு பொங்குதல், சமூக மாற்றம், காணாமல் போனோர் பற்றிய பிரச்சினை போன்ற பல்வேறு விடயங்கள் இவற்றின் பாடுபொருளாகவுள்ளன. பெண்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஜெகா எழுப்பும் வினாக்கள் தர்க்கரீதியானதும் சிந்திக்கத் தூண்டுபவையுமாகும். காணாமல் போன தனது கணவன் பற்றிய பல வினாக்களைச் சுமந்து கொண்டு விடைதேடி அலையும் ஒரு பெண்ணின் மனஉணர்வை தலைப்புக் கவிதையான ‘விடை தேடி’ தெளிவாகப் புலப்படுத்துகின்றது. முப்பதாண்டுக்கால போர் பற்றிய ‘அவலங்கள்’ காலச் சூழலைப் படம்பிடித்துக் காட்டுகின்றது. குறிப்பாகப் பெண்கள் அனுபவித்துவந்த போர்க்கால வலியைத் தத்ரூபமான முறையில் ஜெகா வெளிப்படுத்தியுள்ளமை அவரது கவியாற்றலைக் காட்டுகின்றது. ‘மரணிக்க வேண்டும்’ என்ற கவிதை இதற்கோர் உதாரணமாகின்றது.