13736 தேயிலைப் பூக்கள்: இலங்கை மலையக மக்களின் வரலாற்றுக் காவியம்.

சி.பன்னீர்செல்வம். தஞ்சாவூர் 613 007: அகரம், மனை எண் 1, நிர்மலா நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (சிவகாசி: மீரா பைன் ஆர்ட்ஸ்).

xxiv, 181 பக்கம், விலை: இந்திய ரூபா 175., அளவு: 22×14 சமீ.

சி.பன்னீர்செல்வம் ஈழத்தின் நக்கிள்ஸ் மலைத்தொடரின் தென்றலில் சுகித்து கொற்றகங்கை நதிதீரத்தில் தோய்ந்து, இன்று சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தினால் மலையகத்திலிருந்து வெளியேறி மதுரையில் வாசம்கொண்டதொரு ஈழத்துக் கவிஞன். தன் தந்தையை மலையகத்தின் தேயிலைச் செடிகளுக்கு எருவாக்கிவிட்டு, சொந்த மண்ணைத் துறந்துவிட்டுச் சென்ற சோகம் இவரது விசாரத்தின் அடிநாதமாக இருந்திருக்கின்றது. புரட்சிக் கனவுகளுடன் தீவிர சமூக மாற்றத்தை தேடிநின்ற ஒரு தலைமுறையின் கனவுகள் சிதைந்துபோன அவலத்தைப் பார்த்து நின்ற கையறு நிலையின் விம்மல் இவரது ஆக்கங்களில் எதிரொலிக்கின்றது. திறந்தவெளிச் சிறைகள், ஒரு சாலையின் சரிதம், ஜென்ம பூமி, அகதிகள் தெரு, விரல்கள், திறந்தே கிடக்கும் வீடு ஆகிய நூல்கள் பன்னீர் செல்வத்தின் எழுத்தாற்றலுக்கு சாட்சிகள். மலையகத்தின் அடர்ந்த காட்டுப் பிரதேசத்தை வளம் கொழிக்கும் பூமியாக மாற்ற மலையக மக்கள் சிந்திய செந்நீரும் கண்ணீரும் இக்காவியத்தில் பொசிந்திருக்கின்றன. மலையக மக்களின் முக்கிய அரசியல், சமூகக் கட்டங்களை,  தொழிற்சங்க இயக்கங்களை, இன வன்முறையை, சிறிமாவோ சாஸ்திரி ஒப்பந்தத்தினை எல்லாம் தனது காவியத்தில் விபரித்திருக்கிறார். மலையகத்தின் மாதிரி கதாபாத்திரங்களைப் புனைந்து, அந்தச் சரட்டில் அவர் மலையக மக்களின் பாவப்பட்ட வாழ்வை இழைத்துப் பார்த்திருக்கிறார். இக்காவியம் பன்னீர்செல்வத்தின் கதை மட்டுமல்ல, காலம் காலமாக தமது முன்னோர் பட்ட பாடுகளை பன்னீர்செல்வம் சுமக்கும் சிலுவை இது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 062883).

ஏனைய பதிவுகள்