க.பரணீதரன். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஆவணி 2017. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
vi, 106 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-955-4676-62-6.
2010இல் ‘மீண்டும் துளிர்ப்போம்’ என்ற சிறுகதைத் தொகுதியை வழங்கிய ஆசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது. இதில் படமுடியாது இனித் துயரம், வெட்டியான், நினைந்ததுமற்று நினையாமையுமற்று, மீளப் பிறந்தவர்கள், எழுதிச்செல்லும் விதியின் கை, ஏக்கம், வேர் கொண்ட உறவுகள், மானுடம் வென்றதம்மா, இடமாற்றம், அல்வாய்ச் சண்டியன் ஆகிய பத்துச் சிறுகதைகள் உள்ளன. அல்வாய்ச் சண்டியன் என்ற தலைப்புக் கதை மாணவர்களை சரியான வழியில் நெறிப்படுத்தினால் அவர்களால் வாழ்வின் உயர்நிலையை எய்த முடியும் என்பதை விளக்கி சமூகத்தின் இன்றைய நிலைக்கான பொறுப்பை ஆசிரியர்களும் ஏற்கவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. படமுடியாது இனித் துயரம், போர்ச்சூழலில் மனித வாழ்வு எத்தகைய துன்ப துயரங்களுக்குள் அகப்பட்டுத் தத்தளித்தது என்பதை சிறப்பாகப் பதிவுசெய்துள்ளது. மீளப் பிறந்தவர்கள், எழுதிச் செல்லும் விதியின் கை ஆகிய கதைகளும் போர்க்காலப் பின்னணியைச் சார்ந்தனவாகும். குறிப்பாக எழுதிச் செல்லும் விதியின் கை, வலுக்கட்டாயமாகப் போர்ப் பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டு போர் முடிவுற்ற பின்னர் முகாம் வாழ்க்கை, விசாரணை என முடிந்துவந்து ஆட்டோ ஓட்டி வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த பாஸ்கர் என்கின்ற இளைஞர் கடத்திச் செல்லப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடுமையை பதிவுசெய்கின்றது. வெட்டியான் என்ற கதை பிணம் எரிக்கும் தொழில்செய்ய நிரப்பந்திக்கப்பட்ட மூர்த்தியின் தொழில்சார் அவலங்களை பேசுகின்றது. வறுமைப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த சலவைத் தொழில் செய்யும் மூர்த்தி, சுடலையில் பிணம் எரிப்பதற்கு (வெட்டியான் வேலைக்கு) நிர்ப்பந்திக்கப்படுகிறான். சுடலையில் ஒரு இளம்பெண்ணின் பிணத்தை எரிப்பது அவனிடத்தில் எத்தகைய மனப்பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பதும் அதிலிருந்து மீளமுடியாமல் அவன் எவ்வாறு தவிக்கின்றான் என்பதும் சொல்லப்பட்டுள்ளன. மானுடம் வெல்லும் என்ற கதை பள்ளிக்காலத்தில் காதலித்த இரு இளசுகளின் காதல், சாதியத்தால் திசை மாறிப் பிரிகின்றது. முதுமையில் அவளுக்கு அவன் இரத்ததானம் செய்யும் வாய்ப்புக் கிடைப்பதைப் பேசுகின்றது. ஏக்கம் என்ற கதை புலம்பெயர்ந்தோரின் உள்ளத்தில் ஆழ்ந்திருக்கும் தனிமையையும் பிரிவையும் ஏக்கத்தையும் பற்றிப் பேசுகின்றது. 90ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ள நூல்.