13770 அரங்கநாயகி.

வே.ஏரம்பமுதலி. மட்டக்களப்பு: திருமதி ந.காந்திமதி, இல.32/1, தாமரைக்கேணி வீதி, 2வது திருத்திய பதிப்பு, ஒக்டோபர் 2016, 1வது பதிப்பு, 1934. (மட்டக்களப்பு: நியூ கீன் அச்சகம், 81, முனை வீதி).

xx, 240 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20.5×14.5 சமீ.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், ஆங்கிலத்தில் வீரதீரக் கதைகளை எழுதிப் புகழ்பெற்ற சேர் வோல்டர் ஸ்கொட்டின் ‘கெனில்வேர்த்’ என்னும் நாவலைத் தழுவி தமிழில் எழுதப்பட்ட நாவல் இது. தழுவல் உருவில்கூட, ‘அரங்கநாயகி’, அதற்கு முன்பு வெளிவந்த பெரும்பாலான ஈழத்துத் தமிழ் நாவல்கள் போல, ‘நல்லொழுக்க உபதேச’ நாவலாகவே பரிணமித்தது. இந்த நாவலில் கதாபாத்திரங்களின் பெயர்களும் கதை நிகழும் இடங்களும் மட்டும் தமிழ்ச் சூழலுக்கேற்ப மாற்றப்பட்டுள்ளன. மட்டக்களப்பின் முதலாவது தமிழ் நாவலாகக் கருதப்பெறும் ‘அரங்கநாயகி’, 1919-1920 காலப்பகுதியிலேயே கையெழுத்துப்பிரதியாக இருந்தபோதிலும், பல்வேறு தடங்கல்கள்; காரணமாக கொழும்பு செட்டித்தெரு ஆனந்தா அச்சகசாலை, கொழும்பு ஆதிருப்பள்ளித் தெரு, மெய்கண்டான் அச்சியந்திரசாலை, மட்டக்களப்பு, லங்கா வர்த்தமானி அச்சியந்திரசாலை ஆகியவற்றில் மாறி மாறி அச்சிடப்பெற்று தன் முதற்பதிப்பை 1934இலேயே கண்டிருந்தது. இந்நாவலாசிரியர் ஏரம்பமுதலி மட்டக்களப்பு கோட்டை கல்லாற்றில் 05.11.1897இல் பிறந்தவர். அரசடி சாதனா பாடசாலையிலும், உவெஸ்லியன் மிஷன் மத்திய ஆங்கில கலாசாலையிலும் கற்றுப் பின் கொழும்பில் உயர்கல்வி பெற்றவர். 1919ஆம் ஆண்டு ஆசிரியப் பணியில் ஈடுபட்டுப் பின் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் இணைந்து தன் இறுதிக்காலத்தில் மூதூர் பெரும்பாகத்தின் நீர்ப்பாசன அத்தியட்சகராகப் பணியாற்றியவர். தன் 49ஆவது வயதில் 24.01.1946 அன்று அமரத்துவமடைந்தவர். இவ்விரண்டாவது பதிப்பு, அமரர் வே.ஏரம்பமுதலியின் மகள் திருமதி ந.காந்திமதி அவர்களால் தனது 83ஆவது அகவையில் மீள்பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்