அகணி சுரேஸ். (இயற்பெயர்: சி.அ. சுரேஷ்). சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2018. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்).
216 பக்கம், விலை: இந்திய ரூபா 110.00, அளவு: 18×12 சமீ.
திருமண பந்தத்தில் இணைவதற்காக இலங்கையிலிருந்து கனடாவுக்கு வரும் அமலா என்ற பெண்ணைச் சுற்றி கதை நகர்கின்றது. ஆரம்பத்திலேயே திருமண வாழ்வு தூக்கி எறியப்பட்டு எதிர்காலக் கனவுகள் சூறையாடப்பட்ட அமலாவின் வாழ்க்கை எவ்வாறு முன்நகர்த்தப்படுகின்றது என்பதே கதையின் போக்காகின்றது. ஒரு தனிப்பெண்ணாக தொழில் வாய்ப்புப் பெற்று, தனது கடின உழைப்பினால் ஒரு வீட்டைச் சொந்தமாக வாங்குமளவுக்கு அமலா முன்னேறுகிறாள். ஆசிரியர் ஒரு சாயி பக்தர் என்பதால் நாவலின் ஓட்டத்திலும் ஆன்மீகம் ஆங்காங்கே இழையோடியுள்ளது. அமலா கனடாவுக்கு வந்த காரியம் கைகூடியதா அல்லது திசை மாறியதா என்பதே கதையின் முடிவாகின்றது. புதிய மண்ணில் பேச்சுத் துணைக்கு யாருமில்லாத சூழலில் அமலாவுக்கு தன் மனதில் தோன்றியவற்றைத் தெரிவிக்க கடவுளுடன் ஒருவழி உரையாடலை நாவலில் மேற்கொள்கின்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியான இந்நூலாசிரியர் இங்கிலாந்தில் கணனித் துறையில் முதுமாணிப்பட்டம் பெற்றவர். மெல்பேர்ண் மணி என்ற புனைபெயரில் எழுதிவந்த எழுத்தாளர் திருமதி அ.கனகமணி அவர்களின் மகனாவார்.