13790 குரலற்ற மனிதர்கள் (நாவல்).

கா.தவபாலன் (இயற்பெயர்: கா.தவபாலச்சந்திரன்). அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஆனி 2018. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).

xvi, 136 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-43867-3-0.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கணுக்கேணிக் கிராமத்தில் பிறந்தவர் தவபாலச்சந்திரன். ஞானம் சஞ்சிகையால் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட எழுத்தாளர் கா.தவபாலனின் முதலாவது சிறுகதை, முதலாவது கவிதை என்பன ஞானம் சஞ்சிகையிலே தான் பிரசுரமாயின. தற்போது சிறுகதை, கவிதை, கட்டுரை குறுங்கதை பத்தி எழுத்து ஆகிய துறைகளில் எழுதிவரும் ஆசிரியரின் முதலாவது நாவல் இதுவாகும். அரசியல் விஞ்ஞானத்துறையில் பட்டம்பெற்று, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரிமதிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஈழப் போரில் இறுதி யுத்தத்தைப் பகைப்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நாவல் முள்ளிவாய்க்காலில் மக்கள் பட்ட துன்பங்களை விபரிப்பதோடு வன்னிப்பிரதேசம் சார்ந்த அம்சங்களையும் இணைத்து வளர்த்துச் செல்லப்படுகின்றது. வன்னி மண்ணின் விவசாய நடைமுறைகள், உணவுப் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறைகள் என்பன இந்த நாவலின் மண்வாசனை அம்சத்திற்கு வலுவூட்டுவதாக அமைந்துள்ளன. யுத்தகால அனுபவங்களை விபரிக்கும் இந்த நாவல் ஒரு வரலாற்று ஆவணமாகவும் திகழ்கின்றது. தமிழர்களின் இன விடுதலைப் போராட்டம் காலத்துக்குக் காலம் வெவ்வேறு வடிவங்களை எடுத்தபோதும் விடிவுகாணாத குரலற்ற மனிதர்களாகவே தமிழர்கள் இருக்கின்றார்கள் என்பதை இந்த நாவல் உரத்துப் பேசுகின்றது. இது ஜீவநதியின் 98ஆவது வெளியீடாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 64626).

ஏனைய பதிவுகள்