கோகிலா மகேந்திரன். தெல்லிப்பழை: கலை இலக்கியக் கள வெளியீடு, 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (யாழ்ப்பாணம்: அம்மா அச்சகம், இணுவில்).
xiv, 209 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-7973-06-7.
கோகிலா மகேந்திரன் 1980களில் தனது இளமைக்காலத்தில் எழுதியிருந்த சந்தனச் சிதறல்கள், நிர்ப்பந்தங்கள், வைகறை, பெண்பனை ஆகிய நான்கு குறுநாவல்களையும் இணைத்து இந்நூலை ஆக்கியுள்ளார். இக்குறுநாவல்களின் ஊடாக சமூகத்தில் தான் கண்ட பெண்களின் நிலைகளை மனோவியல் ரீதியாகப் பகுத்தாய்ந்து எளிமையான இனிய நடையில் சற்றும் சோர்வில்லாத வகையில் வாசகருக்கு வழங்கியுள்ளார். ஒரு காலகட்டத்து யாழ்ப்பாணத்து வாழ்வியலை அதன் காலப் பின்னணி சிதறிவிடாமல் ஆவணப்படுத்தியுள்ளார். அவர் எழுத்தாளராகவும், உளவளத்துணையாளராகவும் இருப்பதால் அவரது படைப்பாக்கங்களில் உளவியல்சார் அனுபவங்களின் வெளிப்பாடுகளை அவதானிக்கமுடிகின்றது. நூலின் இறுதியில், 1980களில் இளமைத்துடிப்புடன் இருந்த கதாபாத்திரங்களை புலம்பெயரவைத்து, முப்பதாண்டுகளின் பின்னர் சொந்த ஊருக்கு வரவழைத்து ஒன்றுகூட வைத்திருக்கிறார். குறுநாவல்களில் 1980களில் அவர்களால் எடுக்கப்பட்ட முடிவுகளை இன்றைய சமூக மாற்றச் சூழலில் அடைந்துள்ள அனுபவமுதிர்வின் காரணமாக சரியா தவறா என்றும், மாற்று முடிவொன்றினை எடுத்திருக்கக்கூடுமா என்றும் அப்பாத்திரங்களைக் கொண்டே மதிப்பீடு செய்யவைத்திருக்கிறார். குறுநாவல் படைப்பாக்கங்களில் இது ஒரு சுவாரஸ்யமான புதிய யுக்தியாகும்.