தீபச்செல்வன் (இயற்பெயர்: பாலேந்திரன் பிரதீபன்). சென்னை 600 078: டிஸ்கவரி புக் பேலஸ், இல. 6, மஹவீர் கட்டடத் தொகுதி, முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு, 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை).
200 பக்கம், விலை: இந்திய ரூபா 180., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-86555-57-1
பத்து வயதுச் சிறுவன் ஒருவன் ஏன் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைகிறான் என்பதை விசாரணை செய்யும் புதினம்தான் நடுகல். விடுதலைப்புலிகள் பின்பற்றிய ஈழக் கொள்கையை தமிழர்கள் ஏற்ற வரலாற்று நினைவும், வரலாற்று உளவியலும் பற்றியதான விவரிப்பாக நடுகல் நாவல் அமைகின்றது. போர்க்காலத்தில் பிறந்து வளர்ந்த அபூர்வமான சிறுவன் ஒருவன் எப்படி எல்லாம் தத்தளித்து அலைகிறான் என்பதே நாவலின் கதை. வீரமான அண்ணாவுக்கும் போருக்கு அஞ்சும் தம்பிக்கும் இடையிலான பாசம், அண்ணாவைத் தேடும் தம்பியின் பரிதவிப்பு என்று முழுக்க முழுக்க, ஈழக் குழந்தைகளின் மனங்களை அப்பட்டமாகப் பதிவு செய்கிறது நடுகல் நாவல். ஈழத் தமிழ் இலக்கியமாக இருந்தாலும் சரி, தமிழ் இலக்கியமாக இருந்தாலும் சரி, இதுவரையில் பேசப்படாத பகுதியான போருக்கும் குழந்தைகளுக்குமுரிய தொடர்பை, அதன் விளைவை பேசும் இந்நாவலில் கதை சொல்லியாக ஒரு அப்பாவிச் சிறுவனே அமைகின்றான். ஆயுதங்களற்ற, போர்களற்ற, மாற்றுப் போராட்ட வடிவம் பற்றிய தேடுதலாகவும் இந்நாவலைக் காணமுடிகின்றது. கனடா இலக்கியத்தோட்டம் நடத்திய இயல்விருது விழா 2018இல் சிறந்த புனைவு விருதினைப் பெற்ற நாவல். கிளிநொச்சி மாவட்டத்தின் இரத்தினபுரத்தைச் சேர்ந்த நூலாசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் சிறப்புப்பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் முதுகலைப்பட்டம் பெற்றவர். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டப் படிப்பை (M.Phil)நிறைவு செய்தவர்.