தெளிவத்தை ஜோசப். கொழும்பு 4: பாக்யா பதிப்பகம், இல. 12-5/2, ஸ்பேன் டவர், மிலாகிரிய அவென்யூ, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2016. (கொழும்பு: GOD Creative Lab).
xxii, 245 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-1805-09-8.
33 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் நிகழ்ந்த 1983 இனக்கலவரத்தின் வடுக்களைச் சுமந்து வந்திருக்கின்றது இந்நாவல். 1983ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் நடந்த இனக் கலவரத்தின் விம்பங்களை ஓர் தொடர்கதையாகத் தொகுத்து வெளியிட்டுள்ளார் ஆசிரியர் தெளிவத்தை ஜோசப். 24.7.1983 முதல் 30.7.1983 வரையிலான ஒரு வார கால தமிழின சங்கார மனத்துயரின் பாதிப்பும் பதிவுமே இந்நாவல். நாவலின் பல இடங்களில் பேச்சுவழக்கு உரையாடல் வடிவில் இருப்பது அந்த அவல நினைவுகளை மீண்டும் உயிர்ப்புடன் கண்முன்னே கொண்டு வருகின்றது. 1983 இனக் கலவரத்துக்கான காரணம் பலாலியிலிருந்து யாழ்ப்பாணக் கோட்டையை நோக்கிவந்த இராணுவ ஜீப்பும் ட்ரக் வண்டியும் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்குள்ளாகி 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்தின் எதிரொலி என்று சொல்லப்பட்டாலும், இலங்கை சுதந்திரம் அடைவதற்குக் கால் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே சிறுகச் சிறுக கட்டமைக்கப்பட்ட ஒரு சிங்கள மேலாதிக்கத்தின் தொடர் நிகழ்வுகளின் உச்சமான தமிழினச் சுத்திகரிப்பே இதுவென்பது வரலாற்று உண்மையாகின்றது. மூவாயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். கோடிக்கணக்கில் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இயலாதவிடத்து அவை அழிக்கப்பட்டன. மக்கள் பாதுகாவலர்களான பொலிசார் கைகட்டி நின்று வேடிக்கை பார்த்தனர். இதன் பின்னணியில் நாவல் விரிகின்றது. இனக்கலவரத்தினால் நேரடியாகப் பாதிப்புக்குள்ளாகி ஒரு சிங்களக் குடும்பத்தினால் பாதுகாக்கப்பட்ட நாவலாசிரியரின் நேரடி அனுபவம் நாவலை உயிர்ப்புடன் கொண்டுசெல்கின்றது. தமது 49ஆவது திருமண நாள் நினைவாக 28.08.2016 அன்று இந்நூல் வெளியிடப்பட்டது. ஏற்கெனவே இந்நாவல் தொடர்கதையாக 1996இல் தினகரன் ஞாயிறு பதிப்பில் வெளிவந்தது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62868).