குணா கவியழகன். சென்னை 600 014: அகல் பதிப்பகம், 348-v, டிடிகே சாலை, ராயப்பேட்டை, 1வது பதிப்பு, ஜனவரி 2019. (சென்னை: மணி ஆப்செட்).
(8), 351 பக்கம், விலை: இந்திய ரூபா 330., அளவு: 21.5×14 சமீ.
சிலுவை ஏற்றுபவர்கள்தான் தம் எதிரியின் மரணத்திற்கு மகிமை சேர்க்கிறார்கள். யூதாசும் பிலாத்துவும் இயேசுவின் பெயரால் தான் பேசப்படுகிறார்கள். கர்ப்பநிலத்தின் காதைகளுக்கோ அதன் மனிதர்களுக்கோ ஏதேனும் மகிமை இருக்கிறதென்றால் அதுவும் அவ்வாறே. காருண்யம் காலாவதியாகிப்போன காலமடிப்பில் இடறித் துடித்தது வாழ்வெனும் சொல். புத்தரும் கர்த்தரும் விடமுண்ட கண்டனும் மரித்தே போயினர் என்றுணர்ந்த காலமிது. மனிதரே மனிதரை வீழ்த்தினர். மனிதரே மனிதரை மீட்டனர். ஒருவன் தன் வாழ்வுக்கு எழுத்தை சாட்சியாக நிறுத்த முடியாது. தன் எழுத்துக்கு வாழ்வை சாட்சியாக நிறுத்த முடியும். இதுவரையான என் எழுத்தைப் போலவே போருழல் காதையும் வாழ்வை சாட்சியாக்கித் துணிந்ததுதான். விழித்திரு என்பது இந்த யுகத்தின் எத்தனை அபத்தமான கட்டளை. மனிதன் மீண்டும் காடுகளுக்குத் திரும்பினாலன்றி விழித்தலுக்கான சூழல் சாத்தியமில்லை என்றுதான் தோன்றுகிறது. குறைந்தபட்சம் குருட்டு வெளியில் வாழவைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தாலே அது மேதமைத் தகுதிதான். எவ்வளவுக்கெவ்வளவு இயற்கையில் இருந்து தூரமாய் வாழ்கின்றோமோ அவ்வளவுக்கு அவ்வளவு குருட்டுவெளியில் வாழவைக்கப்பட்டிருக்கின்றோம் என்று காட்டித் தருகின்றது வாழ்வெழுதிப்போகும் இந்த அனுபவம். மானுட அனுபவமும் அதனால் விளைந்த அறிவும் தனியுடைமையல்ல. இத் தீர்மானத்தோடு போருழல் காதையை ஈழத்தமிழர் குலத்தின்சார்பாக என் பங்காய் மனித குலத்திற்குக் கையளிக்கின்றேன் (குணா கவியழகன், என் சொல்லில்).