ஜின்னாஹ் ஷரிபுத்தீன். மருதமுனை: அன்னை வெளியீட்டகம், 2வது பதிப்பு செப்டெம்பர் 2019, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம், 360, பிரதான வீதி).
xii, 190 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-54039-7-9.
மிகவும் சரளமான- நீரோட்டமான நடையில் நாவல் எழுதப்பட்டுள்ளது. முக்காழி நாவலிலே மருதமுனை பற்றிய வர்ணனை மிகவும் நேர்த்தியாகத் தரப்பட்டுள்ளது. ஜமீலா அருமையான ஒரு பாத்திரம். தம்பி மகுமூது மீது வேலை இல்லாது ஊர்சுற்றிக் கொண்டு இருக்கின்றானே என்ற ஆதங்கம் இருந்தாலும் தம்பி என்ற பரிவும் பாசமும் ஜமீலாவிடம் நிறையவே இருக்கின்றது. ஜமீலாவின் கணவர் மீராப்பிள்ளை கடுமையான உழைப்பாளி. ஜமீலாவின் அண்ணன் சேகுமதார் மறைந்துபோன பெற்றோர் வசித்த வீட்டில் வாழ்கிறார். மனைவி பாத்துமாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டவர். வேலை இல்லாதிருக்கும் மகுமூதுவை பாத்துமா இழிவாக பேசுவதினால் ஜமீலாவிற்கு ஆத்திரம். மருதமுனையை பூர்வீகமாகக் கொண்டு கண்டி மடவளையில் வாழ்கின்ற ஒரு நாட்டு வைத்தியர் மூலம் மகுமூதுவிற்கு கண்டி பட்டியகமவிற்கு செல்ல ஒரு சந்தர்ப்பம் ஏற்படுகிறது. அங்கே அவன் வைத்தியரோடு நெருங்கிப் பழகிக் கொண்டிருந்த அப்புசிங்கோ முதலாளி கடையில் வேலை செய்ய ஆரம்பிக்கின்றான். நாவல் விரிவடைகிறது. அப்புசிங்கோ முதலாளி அவருடைய மனைவி பியசீலி… மகள் ஹேமா இவர்கள் அனைவருமே அற்புதமான பாத்திரங்கள். ஹேமா பல்கலைக் கழக மாணவி. அவளுக்கு உற்ற பல்கலைக் கழக தோழி புஷ்பா. புஷ்பாவின் சகோதரன் புஷ்பராஜ் ஒரு இளம் டாக்டர். ஹேமாவிற்கு புஷ்பராஜ் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. புஷ்பராஜூவிற்கும் ஹேமாவிற்கும் இடையே இனம் கடந்த காதல் மலர்கிறது. மகமூது பட்டியகம கடையில் வேலை செய்து கொண்டிருக்கும்பொழுது கலீல் காக்கா நடத்திய சாப்பாட்டுக் கடையில் தான் அவனுடைய உணவு. காலப்போக்கில் கலீல் காக்காவின் குடும்பத்தோடு தொடர்பு ஏற்படுகிறது. இறுதியில் அவருடைய மகள் கதீஜாவை மகமூது மணமுடிக்கின்றான். மகுமூது அப்புசிங்கோ முதலாளியின் உதவியோடு ஒரு வர்த்தக நிலையத்தை ஆரம்பித்து உயர்ந்த நிலைக்கு வருகின்றான். இறுதியில் தன் அண்ணன் மனைவி பாத்துமாவிற்கும் பணம் கொடுத்து உதவுகின்றான். அப்புசிங்கோ-பியசீலியின் மகள் ஹேமாவிற்கும் புஷ்பராஜுவிற்கும் காதல் கைகூடி கட்டுக்கலை பிள்ளையார் கோவிலிலே திருமணம் நடக்கிறது. 1960களுக்கு முன்னர், இலங்கைவாழ் மூவின மக்களிடையே காணப்பட்ட இன, மத, பிரதேச, மொழி பேதமற்ற வாழ்வியலை சித்திரிக்கும் நாவல் இது. தமிழ், சிங்கள, முஸ்லிம் இனங்களக்கிடையே நிலவிவந்த நல்லுறவை மூவினக் கதாபாத்திரங்களையும் வைத்து வரையப்பட்ட சித்திரமாக இந்நாவல் அமைகின்றது. காழ் என்பது விதையைக் குறிக்கும். மூன்று விதைகளைக் கொண்ட பழத்தை முக்காழி என்றழைப்பர். பனையில் மூன்று விதைகள் உள்ளன என்பது கவனிக்கத்தக்கது.