ஸ்ரீ பிரசாந்தன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xxii, 121 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-489-8.
திருக்குறள் மருந்து அதிகாரத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள் பற்றி இலங்கை ஸ்ரீஜயவர்த்தனபுரப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி ஸ்ரீ பிரசாந்தன் இந்நூல்வழியாக சிந்தனையைத் தூண்டும் சிறப்பான ஆய்வொன்றை வழங்கியுள்ளார். திருக்குறளைப் பற்றியும், திருவள்ளுவரைப் பற்றியும் கருத்துரைத்த பிரசாந்தன் சங்க இலக்கியங்களில் மருந்து, மருத்துவன் என்ற சொற்கள் ஆளப்பட்டுள்ள இடங்களைத் தேர்ந்து செய்திகளைச் சேகரிக்கிறார். திருக்குறள் மருந்து அதிகாரத்திலுள்ள ஒவ்வொரு குறளுக்கும் பரிமேலழகர் உரையைத் தந்து அதனோடு பிற உரையாசிரியர்கள் கருத்துக்களையும் விரிவாகத் தந்து ஒற்றுமை-வேற்றுமைகளைக் காட்டியுள்ளார். அடுத்து, பண்டைக் காலம் முதல் இந்தியாவில் நடைமுறையில் இருந்துவரும் சித்த மருத்துவம், ஆயுர்வேதம் ஆகிய இரண்டையும் குறட் கருத்துகளுடன் ஒப்புநோக்கி ஆராய்கிறார். தன் ஆய்வினை திருக்குறளில் மருந்து அதிகாரம், தமிழ் இலக்கியத்தில் மருந்து-கருத்து நிலை ஆராய்ச்சி, மருந்து அதிகாரக் குறட் கருத்துகளும் உரையாசிரியர் கருத்துகளும், மருந்து அதிகாரத்தில் மரபு மருத்துவக் கருத்துகள், மருந்து அதிகாரத்தில் நவீன மருத்துவக் கூறுகள், தொகுப்புரை ஆகிய ஆறு இயல்களின் வழியாக எமக்கு வழங்குகின்றார். நூலின் பின்னிணைப்புகளாக கலைச்சொல் அகராதி, உசாத்துணை நூல்விபரப்பட்டியல் ஆகிய பட்டியல்களுடன், திருக்குறள் கால ஆராய்ச்சி-மொழியியல் அடிப்படையிலான ஆய்வு, சங்க இலக்கியங்களில் மருந்து, திருக்குறள் பிற அதிகாரங்களில் மருந்து ஆகிய ஐந்து ஆக்கங்களும்; இணைக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62856).