13825 புலமைச் சிரத்தைக்கு உட்படாத தமிழ்க் கவிதைப் பாரம்பரியம் (தனிப்பாடற்றிரட்டினை முன்னிறுத்திய நோக்கு).

எஸ்.சிவலிங்கராஜா. யாழ்ப்பாணம்: பேராசிரியர் சு.வித்தியானந்தன் நினைவுக் குழு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, மே 2016. (யாழ்ப்பாணம்: வைரஸ் கிரப்பிக்ஸ், இணுவில்).

50 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.

பேராசிரியர் சு.வித்தியானந்தன் நினைவுப் பேருரையாக 19.05.2016 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் முன்னாள் தலைவரும் ஓய்வுபெற்ற பேராசிரியருமான எஸ்.சிவலிங்கராஜா அவர்களால் வழங்கப்பெற்ற உரையின் நூல் வடிவம் இது. தனிப்பாடற்றிரட்டுகளைத் துணைக்கொண்டு சமகாலத்துச் சமூகத்தைப் பார்க்கும் நோக்குநிலை இவ்வாய்வில் காணப்படுகின்றது. ஆங்காங்கு காலத்துக்குக் காலம் செவிவழியாகக் கையளிக்கப்பட்டு வந்த பாடல்களும் ஏட்டுருவில் இருந்த பாடல்களும் பின்னாளில் அச்சுவாகனமேற்றிப் பாதுகாக்கப்பட்டன. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையில் பல தனிப்பாடற்றிரட்டுகள் வெளிவந்துள்ளன. இவற்றிற்கு ஒரு நீண்ட பாரம்பரியமும் உண்டு. சில தனிப்பாடற்றிரட்டுகள் பல தொகுதிகளில் வெளிவந்துள்ளன. இவற்றிடையே முரண்பாடுகளும் குறைபாடுகளும் இல்லாமலில்லை. இவ்வாய்வில் ஆசிரியர் கா.சுப்பிரமணியபிள்ளை அவர்களால் தொகுக்கப்பட்டு உரையெழுதப்பட்ட (சங்கப் பாடல்கள் முதல் 20ஆம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதிவரை தோன்றிய)  தனிப்பாடற்றிரட்டுகளையே முதன்மைச் சான்றுகளாகப் பயன்படுத்தியிருக்கிறார். அப்பாடல்களின் துணையுடன் அக்காலத்தில் புலவர்களின் ஏழ்மை, சமூகப் பிரச்சினைகள், கோபங்கள் எனப் பல்வேறு சமூகச் செய்திகளையும் சுவையாக வெளிக்கொண்டுவந்துள்ளார்.

ஏனைய பதிவுகள்