மயிலங்கூடலூர் பி.நடராசன் (புனைபெயர்: ஆடலிறை). ம.பா.மகாலிங்கசிவம், அ.சிவஞானசீலன், ம.பா.பாலமுரளி (பதிப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).
xvi, 707 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-955-7331-12-6.
தமிழியல் ஆளுமைகள், வரலாறு, தமிழியலும் விமர்சனமும், நாட்டாரியல், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம், ஆடலிறை குழந்தைப் பாடல்கள், ஏனைய கவிதைகள்ஆகிய தலைப்புகளில் மயிலங்கூடலூர் பி.நடராசன் அவர்கள் எழுதிய 154 படைப்பாக்கங்கள் இப்பெருந்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. பிற்சேர்;க்கையாக ‘ஈழத்துத் தமிழிலக்கியப் புலத்தில் மயிலங்கூடலூர் பி.நடராசன்-பார்வையும் பதிவும்’ என்ற தலைப்பில் சி.ரமேஷ் எழுதிய கட்டுரையும், வெளிச்சம் (புரட்டாசி-ஐப்பசி 2004) இதழில் வெளிவந்திருந்த மயிலங்கூடலூர் பி.நடராசன் அவர்களுடனான இயல்வாணனின் நேர்காணலும் இடம்பெற்றுள்ளன. ‘ஆடலிறை’ என்னும் புனை பெயரில் இலக்கிய உலகில் அறிமுகமான இளவாலை மயிலங்கூடலை பிறப்பிடமாகக் கொண்ட மயிலங்கூடலூர் பிள்ளையினார் நடராசா என்றழைக்கப்படும் இவர் ஒரு இளைப்பாறிய ஆசிரியர். இம்மண்ணில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வுகள், வாழ்ந்த இலக்கியப் படைப்பாளிகள் போன்ற பல்வேறு முக்கிய தகவல்களை எல்லாம் சேகரித்து இம்மண்ணின் தகவல் பெட்டகமாக இவர் இருந்தவர். சிறுவர் இலக்கியம் படைப்பதில் வல்லவரான இவர் ஒரு பால பண்டிதருமாவார். பலாலி ஆசிரியப் பயிற்சி கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்ற இவர் அங்கு பயிற்சி பெற்ற காலத்தில் பல இலக்கியப் பணிகளை மேற்கொண்டு பாராட்டுப் பெற்றவர். ‘பண்டிதம்’ என்னும் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்து சிறப்புப் பணியாற்றியவர். 1980 ம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாண மாவட்டத்தின் கல்வி மூலவள நிலையங்களின் பொறுப்பாளர்களுள் ஒருவராக இவர் பணியாற்றிய போது மாணவர்களை மையப்படுத்தி சிறுவர் மற்றும் குழந்தை இலக்கியப் பயிற்சிப் பட்டறைகளை நடாத்தியுள்ளார். இவ்வாறு இவரால் இத்துறையில் பயிற்றப்பட்டவர்கள், இலக்கியத் துறையில் சமகாலத்தில் வளர்ச்சி அடைந்து தமிழ் மண்ணில் செயற்பட்டு வருகிறார்கள். சிறுவர் இலக்கியத் துறையில் இருபத்தைந்து நூல்களுக்கு மேல் வெளிவர இக்கவிஞர் துணை நின்றுள்ளார். இந்த வகையில் குழந்தைக் கவிதைகளின் இலக்கிய வரலாற்றுக்கு இவர் அளித்துள்ள பங்களிப்பு விதந்து கூறப்பட வேண்டியதாகும்.