க.பரராஜசிங்கம். மட்டக்களப்பு: மட்டக்களப்பு தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு, புரட்டாதி 2017. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி).
406 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 800., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-38370-0-4.
சிந்துவெளி நாகரீகம் என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கில் உள்ள சிந்து நதி பாயும் பிரதேசத்தையும் அதைச் சூழவுள்ள பகுதிகளான தற்போதைய பாக்கிஸ்தான் நாட்டு நிலப்பகுதி முழுவதையும், ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளையும், இந்தியாவின் வடமேற்கில் உள்ள சில நிலப்பகுதிகளையும் உள்ளடக்கிய பெரு நிலப்பரப்பில் மெசொப்பொத்தேமிய, எகிப்திய நாகரிகங்களின் சமகாலத்ததாய் சிறப்புற்று வளர்ச்சியடைந்திருந்த ஒரு நாகரிகமாகும். இந்நாகரிகத்தையும் தமிழரின் நாகரீகத்தையும் பொருத்திப்பார்க்கும் ஒரு ஆய்வு முயற்சி இது. அகழ்வாராய்ச்சிகளும் நாகரிக கண்டுபிடிப்பும், சிந்துவெளி மக்கள், மக்கள் வாழ்வியல் தொழில்கள், சிந்துவெளி நாட்டின் சமயமும் கடவுள் வணக்கமும், தவவாழ்வும் முனிவர் பரம்பரையும், ஆரியர் வருகை, படுகொலைகள், பெரிய படுகொலை நிகழ்ச்சியும் மக்கள் புலம்பெயருதலும், தமிழர்தம் தோற்றமும் பரம்பலும் ஆகிய ஒன்பது அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலாசிரியர், மட்டக்களப்பு குறுமண்வெளியைச் சேர்ந்த கல்வித்துறையில் ஓய்வுபெற்ற பிரதி அதிபராவார். 1933இல் பிறந்த இவர் 1952இல் தமிழ் ஆசிரிய பயிற்சியாளரானார். 1955இல் தமிழாசிரியரானார். 1965இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இணைந்து 1968இல் பட்டதாரியானார். ‘குருபரன்’ என்ற புனைபெயரில் கவிதைகளைப் படைத்தவர் இவராவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 63075).