டொக்டர் லண்டன் அம்பி (இயற்பெயர்: சிவஸ்ரீ பரமேஸ்வர ஐயர் அம்பிகாபதி ஐயர்). லண்டன்: தமிழியல் வெளியீடு, 27B, High Street, Plaistow, E13 0AD, 1வது பதிப்பு, ஜுலை 2019. (சென்னை 600077: மணி ஓப்செட்).
300 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 300., அளவு: 21.5×14 சமீ.
கைலை யாத்திரை பற்றிய சமகாலத் தகவல்களுடனும் பல்வேறு புகைப்பட ஆதாரங்களுடனும் இந்நூலை ஆசிரியர் சுவையாகவும் எளிமையான நடைகொண்டதாகவும் எழுதியுள்ளார். யாத்திரைக்குப் புறப்பட்டு, லண்டன் விமான நிலையத்தில் இருந்து விமானமேறியது முதல் திரும்ப லண்டன் வந்திறங்கியது வரை தம்முடைய பயணத்தை அழகாக விபரித்துள்ளார். அறிமுகம், அடிமானம், ஆரம்பம் ருத்ரஹோமம், பசுபதிநாத் தரிசனம், திபெத் பிரவேசம், நியாலம்-மலையேறும் பயிற்சி, நியாலம்-ஸாகா பிரயாணம், மானஸரோவர், அகண்ட ஹோமம், கைலாச (தென்முக) தரிசனம், மலையேற்றம்-கைலை பாலாவின் அனுபவங்கள், கைலை வலம் (வெளிவீதி வலம்) ஆரம்பம், கைலை வலம், கைலை வலம் -வடமுகம், கைலை வலம் – டோலாமா லா கடவை-கௌரிகுண்டம், கைலை- வெளிப்பரிக்ரமா-பூரணம், மீண்டும் சீன-நேபாள நட்புப் பாலம், கைலை யாத்திரை நிறைவு, மீண்டும் கைலை தரிசனம், ஆகிய 19 அத்தியாயங்களில் ஆங்கிலமொழிச் சுருக்கத்துடன் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்புகளாக, ‘ஈஷா’ வின் முதலாவது செய்திப் பத்திரம், Kailash Manasarovar 2017, Special Kailash Yatra with Kailai Bala, போற்றித் திருத்தாண்டகம், வாழ்த்து ஆகியன இணைக்கப்பட்டுள்ளன. நூலாசிரியர், யாழ்ப்பாணம் கந்தர்மடம் ஸ்ரீ சித்திவிநாயகர் கோவில் ஸ்தாபகர் சிவஸ்ரீ பரமேஸ்வர ஐயர்-சரஸ்வதி அம்மா தம்பதியினரின் இளைய மகனாவார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தனது இளமைக்காலக் கல்வியைப் பயின்று, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவராகப் பட்டம் பெற்றவர். ஆரம்பத்தில் மலையகப் பகுதிகளில் வைத்தியராகப் பணியாற்றிய பின்னர், பேராதனை மருத்துவக் கல்லூரியில் உடற்கூற்றுத்துறை (Anatomy) விரிவுரையாளராகப் பணியாற்றினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் உடற்கூற்றுத்துறை தலைவராகவும் பின்னாளில் பணியாற்றியவர். 1980முதல் பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தும் மருத்துவப்பணியாற்றி, ஓய்வுபெற்று லண்டனில் வாழ்ந்துவருகின்றார்.