உதயணன் (இயற்பெயர்: இராமலிங்கம் சிவலிங்கம்). கனடா: தாய்வீடு பதிப்பகம், Post Box 63581,Woodside Square, 1571, Sandhurst Cir., Toronto, Ontario M1V 1V0, 1வது பதிப்பு, ஜுன் 2015.(அச்சக விபரம் தரப்படவில்லை).
xl, 380 பக்கம், புகைப்படங்கள், விலை: கனேடிய டொலர் 19.99, அளவு: 24×15.5 சமீ., ISBN: 978-0-9947911-0-8.
பின்லாந்தில் 1983 தொடக்கம் 25 ஆண்டுகள் வாழ்ந்த பின்னர், 2008ஆம் ஆண்டில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தவர் உதயணன் என்ற புனைபெயரில் ஈழத்து இலக்கிய உலகில் நன்கறியப்பட்ட இராமலிங்கம் சிவலிங்கம். பின்லாந்தில் வாழ்ந்த காலத்தில் அந்த நாட்டு மொழியைக் கற்றதன் பலனாக ஹெல்சிங்கி பல்கலைக் கழகத்தில் பத்தொன்பது ஆண்டுகள் ஆய்வு உதவியாளராகவும், இந்தியவியல் கற்ற முதுநிலைப் பட்டதாரி மாணவருக்குத் தமிழ் மொழி கற்பிக்கும் விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார். பின்லாந்தின் தேசிய காவியமான கலாவெலாவை பின்லாந்து மொழியான பின்னிஷ் மூல நூலில் இருந்து நேரடியாகத் தமிழுக்கு மொழிபெயர்த்தவர். மீண்டும் மூலநூலில் இருந்து நேரடியாகத் தமிழில் ஒரு வசனநடைத் தமிழாக்கத்தைத் தயாரித்து ‘உரைநடையில் கலேவலா’ என்ற பெயரில் 1999இல் வெளியிட்டார். மேற்படி இரு நூல்களையும் ஹெல்சிங்கி பல்கலைக்கழகம் வெளியிட்டது. பின்லாந்தில் 25 வருடங்கள் வாழ்ந்த அனுபவ நினைவுகளை ‘பின்லாந்தின் பசுமை நினைவுகள்’ என்ற தலைப்பில் ‘தாய்வீடு’ என்னும் கனடா மாத இதழில் மாதமொரு கட்டுரையாக, 45 மாதங்களாகத் தொடர்ந்து எழுதிவந்தார். மலைப்பாறைக்குள் மாபெரும் ஆலயம் என்ற முதலாவது கட்டுரையிலிருந்து, பின்லாந்து மண்ணே வணக்கம் வரையிலான 45 கட்டுரைகளும் இங்கு நூலுருவாக வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62894).