சுமதி இரகுபதி பாலஸ்ரீதரன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: சுமதி பதிப்பகம், வேலுவனராம வீட்டுத் திட்டம், ஹம்டன் ஒழுங்கை, 1வது பதிப்பு, மார்ச் 2019. (கொழும்பு 13: கீதா பப்ளிக்கேஷன்ஸ்).
224 பக்கம், புகைப்படத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.
‘இந்த மானிலம் பயனுற வாழ்கின்றேன்’ என்று நெஞ்சை நிமிர்த்தி எம்மிடையே வாழ்கின்ற மிகச்சிலருள் இணுவையூர் இரகுபதி பாலஸ்ரீதரன் ஒருவர். நமது வாழ்வு, நமது நாட்டுக்கு, எமது இனத்திற்கு, நாம் சார்ந்த சமூகத்திற்கு, எமது இன்தமிழ்மொழிக்கு, எம்முடன் வாழும் பிற உயிரினங்களுக்கு என்று ஏதாவது ஒருவகையில் நல்லது செய்யத் தன் வாழ்வு பயன்படவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவர் இணுவையூர் இரகு. திரு. இரகுபதி பாலஸ்ரீதரனின் எழுத்தார்வமும், வாசிப்பில் அவர் காட்டிய அதீத ஈடுபாடும் அவரை நான்கு நூல்களை இதுவரை எழுதவைத்து எமக்களித்துள்ளது. மூன்று தலைமுறைக்கால கலைக்குடும்பமான இவரின் குடும்பத்தினரின் மூன்று தலைமுறை நூலாக்கங்களையும் தனது துணைவியாரின் பெயரில் வெள்ளவத்தையில் இயங்கும் சுமதி பதிப்பகத்தின் வாயிலாக இதுவரை வெளியிட்டுள்ளார். இணுவையூர் இரகுபதி பாலஸ்ரீதரன் அவர்களின் எழுபதாவது அகவை நிறைவை முன்னிட்டு அவரைப்பற்றி அவரது நண்பர்கள், உறவினர்கள், நலன்விரும்பிகள், தமிழ்ச்சங்கச் சமூகப் பிரமுகர்கள் என்போர் வழங்கிய மலரும் நினைவுகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது.