சைமன் காசிச்செட்டி (ஆங்கில மூலம்), சா.திருவேணிசங்கமம் (தமிழாக்கம்), க.இரகுபரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, ½ டாம் வீதி).
xx, 313 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-9233-47-3.
சைமன் காசிச்செட்டி (Simon Casie Chetty, மார்ச் 21, 1807 – நவம்பர் 5, 1860), 19 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்த புகழ் பெற்ற தமிழர்களில் ஒருவர். அரசாங்கத்தில் பல உயர் பதவிகளை வகித்த இவர் சில காலம் தமிழ் மக்களின் பிரதிநிதியாக இலங்கை சட்டசபைக்கும் பிரித்தானியர்களால் நியமிக்கப்பட்டுப் பணியாற்றினார். இவை தவிர தான் எழுதிய நூல்கள் மூலம் காசிச்செட்டி அவர்கள் தமிழ் மொழிக்கும் தமிழருக்கும் அளப்பரிய சேவையாற்றியுள்ளார். இவர் எழுதிய நூல்களுள் முக்கியமான நூல், 1859இல் அவர் எழுதி யாழ்ப்பாணம், Ripley & Strong அச்சகத்தின் வாயிலாக அச்சிட்டு வெளியிட்ட ‘தமிழ் புளூட்டாக்’ (Tamil Plutarch) என்னும் பெயரில் இவர் எழுதிய 202 தமிழ்ப் புலவர்களின் வரலாறு கூறும் நூலாகும். தமிழ்ப் புலவர் வரலாறு கூற எழுந்த முதல் நூல் இதுவே என்று கூறப்படுகின்றது. இவருடைய ஏனைய நூல்களைப் போலவே இதையும் அவர் ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளார். இதில் 189 தமிழ் நாட்டுப் புலவர்கள் பற்றியும், 13 இலங்கைப் புலவர்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.இதன் 2வது பதிப்பு, தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரின் ஆராய்ச்சிக் குறிப்புடனும், சுவாமி விபுலாநந்தரின் முகவுரையுடனும் 1946இல் கொழும்பில் வெளிவந்தது. அப்பதிப்பினை அடிப்படையாக வைத்தே இத்தமிழாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நூலில் இணைக்கப்பட்டுள்ள மற்றொரு நூலான ‘தமிழ் நூல்விபரப்பட்டியல்’ Royal Asiatic Society யின் இதழ்களில் 1848ஆம் ஆண்டு ஜுன் மாதம் 3ஆம் திகதியும், 1849ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24ஆம் திகதியும், டிசம்பர் மாதம் முதலாம் திகதியும் சைமன் காசிச்செட்டியால் தொடராக எழுதப்பட்டதாகும்.