ஏ.இராசரத்தினம். குரும்பசிட்டி: மாமனிதர் கலைஞானி கலாலயம், 2வது பதிப்பு, மார்ச் 2002, 1வது பதிப்பு, 1902. (யாழ்ப்பாணம்: பிள்ளையார் அச்சகம், 676, பருத்தித்துறை வீதி, நல்லூர்).
(2), 90 பக்கம், புகைப்படத் தகடு, விலை: அன்பளிப்பு, அளவு: 20×14.5 சமீ.
பதிப்புத்துறையின் முன்னோடியான சி. வை. தாமோதரம்பிள்ளை (12.09.1832-01.01.1901) என்னும் சிறுப்பிட்டி வைரவநாதபிள்ளை தாமோதரம்பிள்ளை பண்டைய சங்கத் தமிழ் நூல்கள் செல்லரித்து அழிந்து போகாது, தமது அரிய தேடல்கள் மூலம் அவற்றை மீட்டெடுத்து, காத்து, ஒப்பிட்டுப் பரிசோதித்து, அச்சிட்டு அவற்றை வாழ வைத்த முதல்வராவார். தமிழின் நூல்கள் தொடர்ந்து தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும். தமிழின் பெருமையை, அருமையை தமிழர் உணர்ந்து உயர வேண்டும் என்ற அரிய நோக்கங்களோடு தொண்டாற்றியவர் இவர். இந்நூலில் பிள்ளை அவர்களின் ஜனனம், மனைமாட்சிச் சிறப்பு, பிள்ளையவர்கள் ஏற்ற கடமை, தொல்காப்பியம், வீரசோழியம், உத்தியோகத்திற்குப் பிந்திய சீவியம்-தணிகைப் புராணம், தொல்காப்பியம்-பொருளதிகாரம், கலித்தொகை, பிள்ளையவர்கள் நீதியதிபரானது, இலக்கண விளக்கம், சூளாமணி, பிள்ளையவர்கள் நீதியதிபதித்துவத்தினின்றும் நீங்கியது, எழுத்ததிகாரம், குடும்ப விஷயங்கள், இராஜாங்க மதிப்பு, அகநானூறு, வசன சூளாமணி, பிள்ளையவர்கள் பிற்காலமும் மரணமும், முடிப்புரை ஆகிய தலைப்புகளின் கீழ் சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாறு எழுதப்பெற்றுள்ளது. பின்னிணைப்புகளாக, சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் மறைந்தபோது பாடப்பெற்ற சரமகவிகள் இடம்பெற்றுள்ளன. உ.வே.சாமிநாதையர், வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி, அ.குமாரசுவாமிப் புலவர், நா.கதிரவேற்பிள்ளை, சி.வை.சின்னப்பாபிள்ளை, தி.செல்வச் சேகவராய முதலியார், தெ.அ. இராசரத்தினம்பிள்ளை, (மகனார்) சி.தா.அழகசுந்தரம்பிள்ளை ஆகியோர் இவற்றைப் பாடியுள்ளனர்.