நாகேசு சிவராசசிங்கம். நயினாதீவு: நாகேசு சிவராசசிங்கம், முன்னாள் தலைவர், அறங்காவலர் சபை, நயினை சிறீ நாகபூசணி அம்மன் கோவில், 1வது பதிப்பு, 2003. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டேர்ஸ், இல. 424, காங்கேசன்துறை வீதி).
208 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×18.5 சமீ.
நயினை நாகபூசணி அம்மன் கோவில் தொடர்பான பல தகவல்களைக் கொண்டுள்ள இந்நூலில் நாகர் (குல.சபாநாதன்), நாக வழிபாடு (குல.சபாநாதன்), நாகர் வழிபாடு (சி.பத்மநாதன்), நயினாதீவு (குல.சபாநாதன்), நாகம்மாள் கோவில் (குல.சபாநாதன்), 1938ஆம் ஆண்டின் ஆணைக்குழு அறிக்கை, 14151ஆம் இலக்க வழக்குத் தீர்வை, நடைமுறையிலுள்ள முகாமைத் திட்டம் (தமிழாக்கம்- நாகேசு சிவராசசிங்கம்), நயினாதீவு சிறீ நாகபூசணி அம்மன் கோவில் தொடர்பில் யாருக்கு மரபுவழி நிர்வாக உரிமை உள்ளது (நாகேசு சிவராசசிங்கம்), வள்ளுவர் மடத்தின் வரலாறும் முடியிறக்குவோருக்கு இழைக்கப்பட்ட அநீதியும் (நாகேசு சிவராசசிங்கம்), நயினை ஊஞ்சல் (வண்ணை ம. அமரசிங்கப் புலவர்), சிறீ நாகபூசணி அந்தாதி மாலை (நயினை முத்துச் சுவாமிகள்), நயினாதீவு நாகேசுவரியம்மை பதிகம் (அராலி முத்துக்குமாருப்புலவர், கருத்துரை- நயினைப் பண்டிதர் நா.கந்தசாமி), இணைப்புக்கள், சுற்றுப்பிரகாரத் திருமுறைப் பாக்களும் மற்றும் பாடல்களும் என 13 தலைப்புக்களில் பல விடயங்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. பின்னிணைப்புகளாக அறங்காவலர் சபைக்கு 25.9.2002 நாளிட்டு நாகேசு சிவராசசிங்கம் அவர்கள் அனுப்பிய கடிதத்தின் படி, கோவில் அறங்காவலர் சபை மேற்படி கடிதத்திற்கு அனுப்பிய பதில், கோவில் அறங்காவலர்களுக்கு தனித்தனியாக முகவரியிட்டு நாகேசு சிவராசசிங்கம் அவர்கள் அனுப்பிய நினைவூட்டல் கடிதம், ஊர்காவற்றுறை மாவட்ட நீதிமன்ற நானாவிதம்/37ஆம் இலக்க வழக்கு விசாரணையும் தீர்ப்பும் தீர்வையும், நீதிமன்ற ஆணையாளர் ப.சுப்பிரமணியஐயர் நீதிமன்றுக்குச் சமர்ப்பித்த ஆங்கில அறிக்கையும் அதன் தமிழாக்கமும் அவரது 1448ஆம் இலக்க நில அளவைப் படத்தின் இவ்விடயத்தோடு சம்பந்தப்பட்ட பகுதியின் படியும், பிரசித்த நொத்தாரிசு நாகமுத்தன் விசுவலிங்கம் முகதாவில் நிறைவேறிய 83ஆம் 100ஆம் இலக்க உறுதி சாதனங்களின் படிகள், 1982 டிசம்பரில் வேலணைஉதவி அரசாங்க அதிபர் பணிமனை முன்பாக நடைபெற்ற உண்ணாநோன்பு பற்றிய அறிவித்தல், முடியிறக்கல் தொண்டர் சபையின் தலைவர் சி.இராசையா 22.12.1984 நாளிட்டு யாழ். அரசாங்க அதிபருக்கு அனுப்பிய கடிதமும் இணைப்புக்களும், வள்ளுவர் மடம் திறப்பு விழா அறிவித்தல் ஆகியன இணைக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35665).