11250 மானிப்பாய் மருதடி விநாயகர் சதகமாலை.

சிவசிதம்பரம் திருநாவுக்கரசு. இளவாலை: புலவர் சிவசிதம்பரம் திருநாவுக்கரசு, பழநி ஆனந்த இல்லம், சித்திரமேழி, 1வது பதிப்பு, 1995. (கொழும்பு 12: நியூ வீனஸ் அச்சகம்).

33 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 20×14 சமீ.

ஈழத்து நகுலேஸ்வர வட இலங்கை வலய மேழியூர் சைவப் புலவர் சிவசிதம்பரம் திருநாவுக்கரசு அவர்கள் அருளிச்செய்த பாமாலை. மருதடி விநாயகர் கோயில் சிவயோகி ஒருவரால் ஸ்தாபிக்கப்பட்டுப் பூசிக்கப்பட்ட புண்ணிய தலமாகும். இவ்வாலயம் மருதடி விநாயகர் ஆலயம் அல்லது மருதடிப் பிள்ளையார் கோவில் என வழங்கப்படுகின்றது. யாழ்ப்பாண மாவட்டம், மானிப்பாய் கிராமத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் அருகில் மருத மரங்கள் சூழ்ந்து காணப்படுவதால் இவ்வாலயம் மருதடி விநாயகர் ஆலயம் என அழைக்கப்படுகின்றது. பஞ்சமுகவிநாயக விக்கிரகமும் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோயில் மேற்கு நோக்கியுள்ளது. விநாயகர் மூலஸ்தானத்தில் ஆகுவாகனாகக் காட்சியளிக்கிறார். இவ்வாலயத்தின் வருடாந்த மகோற்சவம் 18 நாட்கள் உற்சவமாக சித்திரைப் புத்தாண்டு தினத்தன்று இடம்பெறும் இரதோற்சவத்திற்கு அமைய இடம்பெறுவது வழமை. இக்கோவிலின் வரலாற்றைத் தெரிந்து கொள்ளக்கூடியதான முதல் ஆவணம் பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டதாகும். உள்ளூர் மக்கள் வழிபடுவதற்காக இக்கோவிலுக்கான காணியை 1856ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணி வழங்கினார். அந்த நிலத்துக்கு பிள்ளையார் திடல் என்ற பெயரிடப்பட்டது. பிற்காலத்தில் இது தனியார் கோவில் ஆக்கப்பட்டுவிட்டது. கோயிலின் தென் திசையில் உள்ள திருக்குளம் ‘பிள்ளையார் குளம்’ என வழங்கப்பட்டது. கோயிலில் உறையும் பஞ்சமுகவிநாயகர் ஐந்து தொழிலைச் செய்கின்றவரும் ஐம்பொறிகளை அடக்கி ஐந்தெழுத்தை ஓதும் அன்பர்களை ஆள்கின்றவரும் ஐந்து மூர்த்திகளுக்கும் அதிபரான பரம்பொருள் தாமே என்பதைக் குறிப்பதாக அமைந்துள்ளது. திரிபுராசுரனால் துன்புற்ற தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட சிவபெருமான் யுத்தத்திற்கு முதலில் விநாயகரைத் தியானம் செய்கிறார். விநாயகர் சிவபெருமானுடைய ஐந்து திருமுகங்களிலிருந்தும் தோன்றி பஞ்சமுக விநாயகராகக் காட்சியருளுகின்றார். சிவபெருமான் திரிபுராசுரனை அழித்தார் என ஒரு கதை விநாயக புராணத்திலுள்ளது. நவாலியூர் சோமசுந்தரப்புலவர் ‘மருதடி விநாயகர் பதிகம்’ பாடியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34953).

ஏனைய பதிவுகள்