க.ரகுராகவன். மட்டக்களப்பு: யுனைட்டெட் வெளியீடு, வர்த்தக முகாமைத்துவ பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம், செங்கலடி, 1வது பதிப்பு, டிசம்பர் 1995. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி).
(12), 164 பக்கம், விளக்கப்படம், அட்டவணை, விலை: ரூபா 200., அளவு: 24×18 சமீ., ISBN: 955-9429-00-0.
இந்நூலாசிரியர் முகாமைத்துவமும் அதன் இயல்பும், முகாமைத்துவ எண்ணக்கருக்களின் தோற்றமும் வளர்ச்சியும், முகாமைத்துவமும் சூழலும், சமூகப் பொறுப்பும் முகாமைத்துவ நெறிகளும் ஆகிய நான்கு பிரதான இயல்களில் முகாமைத்துவத்தை அறிமுகம் செய்கின்றார். திட்டமிடல், ஒழுங்கமைத்தல், நெறிப்படுத்தல், வளங்களைக் கட்டுப்படுத்தல் ஆகியவற்றின் செயற்பாட்டு முறைமையின் அடிப்படையில் முகாமைத்துவம் என்றால் என்ன என அவர் தனது நூலை ஆரம்பிக்கிறார். தொடர்ந்து இந்தச் செயற்பாட்டு முறைமை தொடர்பாகவும், பல்வேறு வலயங்கள், மட்டங்கள் தொடர்பாகவும் அமையும் வெவ்வேறு முகாமைத்துவ நிலைமைகளின் பங்களிப்புகள், தொழிற்பாடுகளை அவர் பகுத்தாய்கிறார். பண்டைய முறைமை தொடக்கம் சமகாலம் வரையிலுமான பல்வேறு முகாமைத்துவ சித்தாந்தங்கள் கோட்பாடுகள் எவை என்றும் அவற்றின் தோற்றத்தையும் ஆராய்கிறார். முகாமைத்துவ அமைப்பு, வெளிச்சுற்றாடல் ஆகியவற்றுக்கிடையேயான ஊடாட்டம் பற்றியும் பரிசீலிக்கிறார். அமைப்பின் இயல்பு, கட்டமைப்பு ஆகியவற்றினாலும், நிலவும் கலாச்சாரம், பொருளாதாரச் சூழல், தொழில்நுட்பவியல் சார்ந்த தன்மையினாலும், சட்ட அரசியல் சூழலினாலும், பொருள் வழங்குபவர்கள், நுகர்வோர், போட்டியாளர்கள் போன்றவர்களினாலும், இந்த உறவின் உயிரோட்டம் தங்கியிருக்கிறது என அவர் விதந்துரைக்கின்றார். நூலாசிரியர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதியாகப் பணியாற்றுபவர்.