கற்சுறா. நோர்வே: உயிர்மெய் பதிப்பகம், Kaptein Linkes vei 9A, 6006 Aalesund, இணை வெளியீடு, கிளிநொச்சி: மகிழ், 754 கனகராசா வீதி, திருநகர் வடக்கு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2015. (கொழும்பு: ஏஜே அச்சகம், தெகிவளை)
xii, 67 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14 சமீ.
ஈழவிடுதலைப் போராட்டத்தையொட்டி எழுந்த இலக்கியத் தடத்தில்; தமிழ்பேசும் சமூகங்கள் அனைத்தையும் பொதுமைப்படுத்தி, ஒரு அரசியல் தர்க்கம் உருவாக்கப்பட்டது. சிங்கள அரசுக்கெதிரான நடவடிக்கைகளில் தங்களது பங்களிப்புக்களைச் செய்த பல அமைப்புக்களும், சமூக சக்திகளும் இருப்பினும்கூட, குறித்த ஒரு அமைப்பே – தமிழ் பேசும் மக்களுக்கான விடுதலையை பெற்றுத்தரும் என்ற ஒரு நம்பிக்கையை வளர்க்கப்பட்டது. ஏனைய அமைப்புக்களும், சமூக சக்திகளும், சந்தர்ப்பங்களுக்கேற்ப ‘துரோகி’ களாக மாற்றப்பட்டன. இலக்கியவாதிகளில் பெரும்பாலானோர் நிச்சயமானதும், அதிகாரத்துவம் மிக்கதுமான அமைப்பை சார்ந்திருப்பது என்ற நிலைப்பாட்டை கடைப்பிடிக்க தொடங்கினர். இங்கே, சிறியளவிலான எதிர்க்குரல்கள் மேலெழுந்தாலும் துரோகிகளின் இலக்கியமாக அவை மறைக்கப்பட்டன. இந்த எதிர்க்குரல்கள் ஈழத்தில் இருந்து சாத்தியமாகாததால் புலம்பெயர்ந்தவர்களிடமிருந்தே மூர்க்கமாக எழுந்தன. அந்தத் திசையில் பல கதைசொல்லிகள் உருப்பெற்றனர். ஆனால், கவிஞர்கள் மிகக் குறைவாகவே வெளிப்பட்டனர். அப்படி உருவான கவிஞர்களில் ஒருவராக கற்சுறாவைக் குறிப்பிடலாம். ஈழத்து இலக்கியத்திற்கான தனித்த ஒரு அடையாளத்தை இந்த எதிர்க்குரல்கள் கேள்விக்குட்படுத்தின. மக்களுக்கு விடுதலை பெற்றுத்தருவதாகச் சொன்ன அந்த அதிகார சக்கதிகள் மக்களை எப்படி நடத்தின என்பதையோ, அம்மக்களின் வாழ்க்கையை எப்படி மோசமாக சிதைத்தது என்பதையோ வெளிப்படுத்த தயங்கியதை, ஈழத்தில் எழும்பிய இலக்கிய எதிர்க்குரல்கள் தங்களின் கவனத்திற்குட்படுத்தின. எவ்வளவுதான், மறைத்தாலும் – புறக்கணித்தாலும் எதிர்குரல்கள் தங்களது சிறு செயற்பாட்டினூடாக தொடர்ந்து தம்மைத் தக்கவைத்துக்கொண்டன என்பதுதான் உண்மை. அதன், சாட்சியங்கள் பல இன்றிருக்கிறன. ஆயினும், அதன் கவிதையூடான முக்கிய சாட்சியம் கற்சுறாவின் ‘அல்லது யேசுவில் அறையப்பட்ட சிலுவை’ என்கின்ற கவிதைத் தொகுப்பாகும். இலக்கிய மையப்போக்குகளாக, கருதப்பட்ட, தனித்தனி பகுதிகளான (வடிவங்களான) நுண்காவியம், கவிதை, வசனம், உரைநடை, கதைசொல்லல் என அனைத்தையும் அளவு வித்தியாசத்தில் ஒரு பிரதியில் கலந்து அதையே கவிதை என அறிவிக்கிறார். இது ஒருவகை எதிர்ச்செயல்தான். நிலவுகிற இலக்கியப்போக்குகளை கலங்கடிக்கும் ஒரு வகை எதிர் இலக்கியச் செயல் இது. இவருடைய பிரதிகளில் பலவற்றை, வழமையாக ‘கவிதை’ என அழைக்கும் பிரதிகளோடு இணைத்து வாசிக்க முடியாது. ஏனெனில், அந்த மைய நீரோட்ட முன்வைப்புகளை அவர் ஏற்கவில்லை என்பதுதான் அதன் மறைமுகமான பொருள். ஈழத்து தமிழ் இலக்கியம் என அழைக்கப்படுவது, பல வகையான இலக்கியப்போக்குகளின் ஒன்றிணைந்த இடம் எனக்கருதினால், அதற்குள் உருவாகிவந்த எதிர் இலக்கியச் செயற்பாட்டின் பிறிதொரு முகம்தான் கற்சுறாவின் இந்தக் கவிதைகள். (ரியாஸ் குரானா).