குறிஞ்சிவாணன், முல்லை வீரக்குட்டி, தம்பிலுவில் ஜெகா. தம்பிலுவில் 32415: வி.பி.எம்.வெளியீடு, 31, சாகாமம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1998. (அக்கரைப்பற்று: செலெக்ஷன் ஓப்செற் அச்சகம்).
50 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 19.5×13.5 சமீ.
குறிஞ்சிவாணன் (பி. மாணிக்கம், தெமோதரை, பதுளை மாவட்டம்) குறிப்பிடத்தக்க ஈழத்துக் கவிஞர் ஆவார். 1963 இல் எழுதத் தொடங்கிய இவர் குறிஞ்சிவாணன் என்ற புனைபெயருடன் அக்கரைப்பாமா, சாகாமம் மணியன் போன்ற புனைபெயர்களிலும் கவிதைகள் எழுதியுள்ளார். அக்கரைப்பற்றில் சிலகாலம் வாழ்ந்து தற்போது திருக்கோயில் பிரிவிலுள்ள சாகாமம் எனும் குடியேற்றக் கிராமத்தில் வசித்துவருகிறார். 23.03.1949 அன்று பிறந்த முல்லை வீரக்குட்டி தம்பிலுவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தம்பிலுவில் மகாவித்தியாலயம், கல்முனை பாத்திமா கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றவர். 1968 இல் க.பொ.த. சாதாரணதரம் படித்துக்கொண்டிருக்கும் காலத்திலேயே கவிதையுலகில் பிரவேசித்த இவரின் கவிதைகளுக்கு சிந்தாமணி, வாரமஞ்சரி, தினபதி, கவிதா மண்டலம் போண்ற பத்திரிககள் களமமமைத்துக் கொடுத்தன. கல்முனை புதிய பறவைகள் கவிதாமண்டல அமைப்பாளருள் ஒருவரான இவர் , 1974 இல் திருமலையில் புதிய ஜனநாயக எழுத்தாளர் கலை இலக்கிய மாநாடு நடத்தவும் காரணமாயிருந்தார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கொழும்பு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடாத்திய கலை இலக்கிய மாநாட்டில் கவிதை படிக்கவும் விமர்சிக்கவும் அழைக்கப்பட்டு பாராட்டப்பட்டுள்ளார். இவரின் கவிதைத் திறமையைப் பாராட்டி திருக்கோயில் பிரதேச செயலகம் 1996 இல் சாகித்திய விழாவில் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தது. ஜெகதீஸ்வரி நாதன் (23.04.1960) அம்பாறை, தம்பிலுவிலைச் சேர்ந்த ஆசிரியை, கவிஞர். இவரது தந்தை சபாரெத்தினம்; தாய் நாகமணி. கலைமாணிப் பட்டதாரியான இவர், தம்பிலுவில் ஜெகா என்னும் புனை பெயரில் அறிமுகமானவர். இவர் தனது 12 ஆவது வயதில் ‘அன்னை’ என்னும் கவிதை எழுதிப் பிரசுரமாகக் கண்டவர். 1972 முதல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ‘சிறுவர் மலர்’, ‘பூவூம்பொட்டும்’, ‘வாலிபர் வட்டம்’, ‘ஒலிமஞ்சரி’, ‘இளைஞர் மன்றம்’ போன்ற வானொலி நிகழ்ச்சிகளில் இவரது கவிதைகள் ஒலிபரப்பாயின. இவர் கவிக்கோகிலம் என்ற பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். இவரது கவிதைகள் கோகிலம், காற்று, தூது, இந்துமதி, இதயசங்கமம், நிறைமதி, பெண் போன்ற சஞ்சிகைகளில் வெளிவந்தன. இவர் ‘கோகிலம்’ சஞ்சிகையின் துணை ஆசிரியராவார். இம்மூவரினதும் தேர்ந்த கவிதைகளைக் கொண்டதாக இத்தொகுப்பு வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21129).