இ.நமசிவாயம்பிள்ளை (மூலம்), நம.சிவப்பிரகாசம் (உரையாசிரியர்). மல்லாகம்: நம. சிவப்பிரகாசம், 2வது பதிப்பு, ஐப்பசி 1983, 1வது பதிப்பு, புரட்டாதி 1923. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச அச்சியந்திரசாலை).
vi, (6), 20 பக்கம், விலை: ரூபா 10., அளவு: 21×14 சமீ.
இது யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் ஸ்ரீமத் அ.குமாரசுவாமிப் புலவர் அவர்களின் மாணாக்கர் யாழ்ப்பாணத்து மாதகல் ஸ்ரீ இ.நமசிவாயம்பிள்ளை அவர்களால் இயற்றப்பெற்று நூலாசிரியரின் மகனான இந்துசாதனம் ஆசிரியர் நம. சிவப்பரகாசம் அவர்களால் உரையெழுதப்பெற்று வெளியிடப்பட்டுள்ளது. மூலநூல் 1923இல் வயாவிளான் ஜயசிறி சாரதா பீடேந்திரசாலையில் அச்சிடப்பட்டு வெளிவந்திருந்தது. இலங்கையின் ஊர்ப்பெயர்களை குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஊர்ப்பெயர்களைத் தொடர்புபடுத்தியமைத்த கட்டளைக் கலித்துறைகளில் சைவ சமய உட்பொருளைப் பொதிந்து வைத்துள்ளார். இத்தகைய 27 செய்யுள்களை சிலேடைப் பொருளில் நாமாந்திரிதை வகையில்; அமைத்து அழகார்ந்த கவிதை நூலாக ஆக்கியுள்ளார்.
நாரந்தனையுடையான் பூநகரியினண்ணுடையான்
றேருஞ்சுன்னாகமுடையானைச் சாவகச்சேரிதூரி
வேர்வந்தளவெட்டி பச்சிலைப் பள்ளிவிளாங்குளம்போய்ச்
சேரும்படிசெலக் காரைக்காலாள்கையிற் சிக்கினனே (8வது செய்யுள்)
இதில் நாரந்தனை, பூநகரி, சுன்னாகம், சாவகச்சேரி, அளவெட்டி, பச்சிலைப்பள்ளி, விளாங்குளம், காரைக்கால் ஆகிய ஊர்ப்பெயர்கள் காணப்படுகின்றபொதிலும், ஆழ நோக்கில் இக்கவிதையின் பொழிப்பு, கைலாசபதியாகிய சிவபெருமான் பக்திவலையில் அகப்படுவாரன்றி அகங்காரமுடையார் கண்களுக்குத் தோற்றமாட்டார் என்பதாகும்.
இச்செய்யுளின் பிரிப்பு பின்வருமாறமையும்:
நாரந்தனை உடையான் – திருப்பாற் சமுத்திரத்தையுடைய மகாவிட்டுணுவும், பூநகரியில் நண்ணுடையான் -தாமரைப்பூவாகிய கோயிலையுடைய பிரமதேவரும், தேரும் சுன்னாகம் உடையானை-ஆராயப்படுகின்ற வெள்ளியங்கைலாசமலையைக் கோவிலாகவுடைய சிவபிரானை, சாவகச்சேரி துரீ- மரணத்தை அகத்தே கொண்டிருக்கின்ற ஊர்கள் எவ்விடத்தும் தேடி, வேர் வந்து அளவெட்டி- எல்லையெட்டியதன் நிமித்தம் வேர்வைகொண்டு களைத்து, பச்சிலைப்பள்ளி விள் ஆங் குளம்போய்ச் சேரும்படி செல்ல-மகாவிட்டுணுவும் பிரதம தேவரும் முறையே பசிய ஆலிலைச் சயனத்தையும் பூக்களலருகின்ற தாமரை வாவியையுமடைய, காரைக்காலாள் கையல் சிக்கினேன்-அடியார்க்கெளியனாகிய சிவபெருமான் முதிர்ந்த அன்பையுடைய காரைக்கால் அம்மையார் கையிற் சிக்கி அப்பெருமாட்டிக்குத் தரிசனங் கொடுத்தார் என்ற கருத்தினை இச்செய்யுள் வழங்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13441).