திருக்கோவில் யோகா யோகேந்திரன். அம்பாறை: யோகா யோகேந்திரன், யோக வாசா, திருக்கோவில், 1வது பதிப்பு, 2015. (அக்கரைப்பற்று: மல்ட்டி அச்சகம்).
xii, 100 பக்கம், விலை: ரூபா 200, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-41546-2-9.
திருக்கோவில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தமிழர்கள் வாழும் கிராமம். அக்கரைப்பற்று கிராமத்தில் இருந்து 8 மைல் தொலைவில் இது அமைந்துள்ளது. இங்கிருந்து இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர் யோகா. தினகரன் பாலர் கழகத்தின் வழியாகத் தன் குழந்தைப் பிராயத்திலேயே எழுதத் தொடங்கியவர். 70களில் அதிகமான கதைகளை தினகரன், ராதா, சிந்தாமணி போன்ற பத்திரிகைகளுக்கு எழுதியபின் ஓய்ந்திருந்தவர். அரசாங்க எழுதுவினைஞராகவும், ஆசிரியையாகவும் பணிபுரிந்து சுமார் 20 ஆண்டுகளின் பின் 1998இல் இவரது மீள்வரவு, பண்பாட்டலுவல்கள் அமைச்சின் சிறுகதைப் போட்டியின்போது நேர்ந்தது. மீண்டும் வீச்சுடன் எழுதத்தொடங்கிய இவரது கவிதைகளின் தொகுப்பு இது. வாழும் ஊரின் சிறப்புக்கள், வளம்மிக்க அந்தநாள் நினைவுகள், பழமைகள், புதுமைகள், இளமைக்காலத்து நினைவுகள், வறுமையின் கொடுமைகள், நோயின்றி நாம் வாழ்வதற்காய் வழிகாட்டும் நெறிமுறைகள், போர்க்கால அவலங்கள், புத்திமதி கூறுகின்ற புதுமைக் கருத்துக்கள், சிந்தனையைக் கிளறும் சிறப்பான தகவல்கள் எனப் பலவற்றையும் உள்ளடக்கி இக்கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61355).