க.கணபதிப்பிள்ளை. கரவெட்டி: அமரர் திரு.முருகேசு வேலுப்பிள்ளை அவர்களின் நினைவுமலர், பூம்புகார், கரவெட்டி கிழக்கு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2005. (அச்சக விபரம் தரப்படவில்லை).
48 பக்கம், புகைப்படம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ.
பழைய தமிழ்ச்செய்யுளாலே புதுமையான பொருளைப்பாடுவதில் கைதேர்ந்த பேராசிரியர் கணபதிப்பிள்ளை, ஆற்றுப்படை என்னும் பழைய இலக்கியவடிவத்தைக் கையாண்டு யாழ்ப்பாண மண்மணம் கமழும் இலக்கியமாக 1940இல் இதைப் பதிப்பித்து வெளியிட்டிருந்தார்;. அந்நூலின் மீள்பதிப்பாக அமரர் திரு.முருகேசு வேலுப்பிள்ளை அவர்களின் நினைவுமலராக 16.10.2005இல் வெளியிடப்படுகின்றது. இந்நூல் யாழ்ப்பாணத்து ஊர்களின் புவியியலமைப்பு, மக்களின் வாழ்வியல், குறிப்பாக வடமராட்சிப் பிரதேச சமூக பண்பாட்டுக்கூறுகள் மிகத் தெளிவாக இச்செய்யுள் நூலில் கலைநுணுக்கத்தோடு வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளன. பருத்தித்துறையிலிருக்கும் காதலனுடைய ஊருக்கு யாழ்ப்பாணத்துக் காதலியை ஆற்றுப்படுத்துவதாகக் காதலியாற்றுப்படை அமைகின்றது. இவ்விரு ஊர்களுக்கிடையே உள்ள சிற்றூர்கள் சிறப்பித்துப் பாடப்படுவதுடன், இவ்வூர்களினூடாகச் செல்லும் காதலி பல நிகழ்ச்சிகளையும் காட்சிகளையும் கண்டு செல்வதாகக் கற்பனைசெய்து, அந்நிகழ்வுகளும் காட்சிகளும் இக்கவிதைநூலில் விரித்துரைக்கப்படுகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36910).