மாவைச் சின்னக்குட்டிப் புலவர் (மூலம்), தண்டிகை கனகசபாபதிப்பிள்ளை (அரும்பதவுரை). கருகம்பனை: அமரர் திருமதி பூரணபாக்கியம் சங்கர் நினைவு வெளியீடு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2009. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி).
xiv, 67 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12.5 சமீ.
ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் இறுதிக்கட்டத்தில் வலிகாமப் பகுதியில் அதிகார முதலியாகத் தெல்லிப்பழையில் இருந்த தண்டிகைக் கனகராய முதலியாரைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு அவரால் ஆதரிக்கப்பட்டவரான மாவை சின்னக்குட்டிப் புலவரால் இயற்றப்பட்டது தண்டிகைக் கனகராயன் பள்ளுப் பிரபந்தமாகும். கி.பி.1792 ஆண்டளவில் இயற்றப்பட்ட இந்த இலக்கியம் 1932இல் தெல்லிப்பழை வ.குமாரசுவாமி அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு சென்னையில் முதலில் பதிப்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தின் ஆதரவில் சே.வெ.ஜம்புலிங்கம்பிள்ளை அவர்களால் இப்பதிப்பு 1932இல் வெளியிடப்பட்டது. இந்நூலுக்கான அரும்பதவுரை, குறிப்பு என்பவற்றை சென்னைப் போலிஸ் இன்ஸ்பெக்டராயிருந்து இளைப்பாறிய யாழ்ப்பாணம்-தெல்லிப்பழை-தண்டிகைக் கனகசபாபதிப்பிள்ளை எழுதியுள்ளார். யாழ்ப்பாணக் குடியேற்ற ஆராய்ச்சி முதலிய குறிப்புகளை யாழ்ப்பாண ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்க உபதலைவர்களுள் ஒருவரும் இலங்கை சுப்றீம் கோர்ட் சட்டத்தரணியும் பிரசித்த நொத்தாரிசுமான தெல்லிப்பழை வ.குமாரசுவாமி அவர்கள் எழுதியுள்ளார். இந்நூலின் பின்னைய பதிப்பொன்று நவம்பர் 1983இல் ஆசிரியர் ஆ.ஞானசுந்தரம் அவர்களின் நினைவு வெளியீடாக காங்கேசன்துறை, மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலய தமிழ் மன்றத்தினால் வெளியிடப்பட்டிருந்தது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 413). கருகம்பனையூர் அமரர் திருமதி பூரணபாக்கியம் சங்கர் நினைவு வெளியீடாக இம்மூன்றாவது பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தண்டிகைக் கனகராய முதலியாரின் வழித்தோன்றலான கருகம்பனை வேலாயுதம் அவர்களின் மகளே அமரர் திருமதி பூரணபாக்கியம் சங்கர் ஆவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 48169).