ஈழத்துப்பூராடனார் (தமிழாக்கம்), எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: ஜீவா பதிப்பகம், 1108 Bay Street, Toronto, Ontario M5S 2W9, 1வது பதிப்பு, ஆவணி 1990. (கனடா: ரிப்ளெக்ஸ் அச்சகம், 1365 Midway Blvd, Unit No.24, மிஸிஸாகா L5C 2J5, ஒன்ராரியோ).
xxxvi, x, 158 பக்கம், விலை: கனேடிய டொலர் 20., அளவு: 20.5×13.5 சமீ.
மன்னன் ஈடிப்பசு உலகின் தலைசிறந்த துன்பியல் நாடக ஆசிரியர் நால்வருள் ஒருவரான சொபக்கிளிசுவினால் எழுதப்பட்டது. தீபசு நாட்டின் அரசன் இலயசுவிற்கும் அவன் மனைவி யோகதாவிற்கும் மகன் ஈடிப்பசு. இவன் பிறந்த பொழுது இவன் தன் தந்தையைக் கொன்று தாயை மணமுடிப்பான் எனத் தெய்வ வாக்கு எழுகிறது. அதற்கு அஞ்சிய இலயசு குழந்தையின் காலிற் குத்திக் கயிற்றினால் வரிந்து கட்டி, இடையன் ஒருவனிடம் கொடுத்துக் காட்டு மலையில் அதனைக் கொன்றுவிடுமாறு பணிக்கிறான். ஆனால் இடையனோ குழந்தையைக் கொல்லாது கொரிந்து என்னும் நகரத்துக்குக் கொண்டு சென்று அந்நகர மன்னனிடம் கொடுக்கிறான். அக்குழந்தை வளர்ந்து பெரியவனாகித் ‘தான் யார்? எங்குப் பிறந்தவன்?’ என்ற உண்மையைத் தெரியாது பல கொலைகளைச் செய்து ஈற்றிலே தீபசு நாட்டிற்கே வருகிறான். தெய்வீகச் செய்தி உண்மையாகின்றது. அவன் தன் தந்தையைக் (அவர் யார் என அறியாத நிலையிற்) கொன்று தாயாகிய யோகதாவை மணந்து பதினைந்தாண்டுகள் இன்பமாகப் பிள்ளைச் செல்வமும் பெற்று வாழ்கின்றான். ‘இவற்றிற்குக் காரணம் இலயசைக் கொன்றவனே: அவன் தண்டிக்கப்படாமையே’ எனத் தெய்வக்குறி கூறுகிறது. அக்கொலையாளி யார் என்ற தேடலிலே ஈடிப்பசு ஈடுபட்டுத் தானே அக்கொலையாளி என்பதை ஈற்றில் அறிந்து கொள்கிறான். உலகிலே என்றுமே நிகழாத மாபெருங் கொடுமைக்கு விதி தன்னைக் கருவியாக்கியதை உணர்ந்த ஈடிப்பசு தன் கண்களைத்தானே குத்திக் கொண்டு காடுகளிலே அலைந்து திரிந்து ஈற்றில் இறக்கிறான். உணர்ச்சிக் கிளர்வுகளையும் எதிர்பார்ப்புக்களையும் மிகுதியாகக் கொண்ட பல சம்பவங்கள் மன்னன் ஈடிப்பசு நாடகக் கதையிலே அமைந்துள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11316).