திமிலைத் துமிலன் (இயற்பெயர்: சின்னையா கிருஷ்ணபிள்ளை). மட்டக்களப்பு: கவிமணி வெளியீட்டுக் குழு, முத்தமிழ் மன்றம், அரசினர் ஆசிரியர் கலாசாலை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1988. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ விக்னேஸ்வரா அச்சகம், 150, நாவலர் வீதி).
(8), 101 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×14 சமீ.
ஒரு நெடுங்கதைப் பாடலாக மலர்ந்துள்ள இக்காவியம் 27.12.1963 முதல் 01.05.1964 வரையிலான காலப்பகுதியில் ஆக்கப்பட்டது. லெமூரியாக் கண்டம் பற்றிய வரலாற்றுச் செய்திகளை ஆதாரமாகக்கொண்டு புனையப்பட்ட இந் நெடுங்கவிதையில் சாந்தி என்ற சிறுமி லெமூரியாக் கண்டத்தின் பழம்பதியான எல்லத்தின் தலைவன் எல்லாளனின் புதல்வி எழிலியைச் சந்தித்து நட்புக் கொள்கிறாள். அவர்களின் உரையாடலின் வாயிலாக எல்லமும் ஈழமும் கொண்ட தொடர்பாடுகள் விரிகின்றன. இக்கதையில் வரும் எல்லாளனுக்கும் துட்டகைமுனுவுடன் சண்டையிட்ட எல்லாளனுக்கும் தொடர்பேதுமில்லை. மட்டக்களப்பு திமிலைத்தீவைச் சேர்ந்த திமிலைத் துமிலன், நீரர மகளிர், கொய்யாக்கனிகள், நெஞ்சம் மலராதோ?, அழகுமுல்லை, மஞ்சு நீ மழைமுகில் அல்ல, முத்தொள்ளாயிரம், அணில்வால், யாப்பும் அணியும், தமிழ் இலக்கியம் கற்பித்தல், திமிலைத்துமிலன் கவிதைகள்- காதல், திமிலைத்துமிலன் கவிதைகள் -சமூகம், பாவலர் ஆகலாம், கருமணியிற் பாவாய், ஈழத்துக் கல்விமரபில் எண்ணெய்ச்சிந்து ஆகிய நூல்களின் ஆசிரியர். சென்னை குழந்தை எழுத்தாளர் சங்கம் நடாத்திய கவிதைப் போட்டியில் முதற் பரிசில் பெற்ற இவர், தொடர்ந்து பல்வேறு இலக்கிய வடிவங்களிலும் பரிசில்களைப் பெற்றவர். தனது இலக்கிய சாதனைக்காக ஆளுநர் விருது, கலைக்கழக விருது, கலாபூசணம், கவிமணி, தமிழ் ஓளி, கவியரசு, கவிகுலபாஸ்கரன் ஆகிய விருதுகளையும் பெற்றவர். 2009 மார்ச் மாதம் 30ம் திகதி கிழக்குப் பல்கலைக் கழகம் இவருக்கு ‘கலாநிதிப் பட்டம்” வழங்கி கௌரவித்ததுடன், கனடியத் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் 11.09.2009ம் திகதி நிகழ்த்திய இவரது பவள விழாவிலே ‘செந்தமிழ்க் கவிமணி” என்ற பட்டம் வழங்கி கௌரவித்தது. இவர் மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையில் பயிற்சி பெற்றுப் பட்டம் பெற்று அங்கேயே நீண்ட காலம் விரிவுரையாளராகக் கடமையாற்றி ஓய்வுபெற்றவர். ஈழத்துச் சஞ்சிகைகள் பலவற்றில் ‘கிருஷ்ணா’ என்ற பெயரில் எண்ணற்ற ஓவியங்களையும் வரைந்துள்ளார். வீரகேசரியில் 1950 களில் தாரா என் தங்கை என்ற கவிதைச் சித்திரத் தொடர்கதையையும் இவர் வரைந்துள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39074).