வாகரைவாணன் (இயற்பெயர்: சந்தியாப்பிள்ளை அரியரெத்தினம்). மட்டக்களப்பு: வள்ளல் பேதுருப்பிள்ளை உடையார் நினைவகம், உடையார் சதுக்கம், வாகரை, 1வது பதிப்பு, நவம்பர் 1999. (மட்டக்களப்பு: ஜெஸ்காம் ஓப்செட் அச்சகம்).
vi, 45 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 20×14.5 சமீ.
மட்டக்களப்பில் பலம்வாய்ந்த இராச பரம்பரைகள் உருவாகாத காரணத்தால் மட்டக்களப்பு மண்ணின் வரலாறு பொலிவு பெறவில்லை என்பர் தமிழறிஞர். அந்த மண்ணில் காவியம் எதுவும் தோன்றவில்லை என்ற குறைபாட்டை நீக்கும் வகையில் இக்காவியத்தை வாகரைவாணன் 1999இல் ஆக்கியிருந்தார். அவ்வேளையில் வடக்கு கிழக்கு மாகாண விருதினை 1999இல் இந்நூல் பெற்றிருந்தது. மட்டக்களப்பு வரலாற்றின் ஒரு பழைய நிகழ்வினை மையப்படுத்தி அதனைச் சுற்றியுள்ள மட்டக்களப்பு மக்களின் பாரம்பரியம், கலை, பண்பாடு போன்ற அம்சங்களைப் பின்னிப் பிணைந்ததாக இக்காவியம் அமைந்துள்ளது. பாயிரம், தாயே தமிழே, மண்ணும் மணமும், நனி எழில் நகரம், புதுமனைப் புகுவிழா, நாச்சியாரின் நல்லரசு, பொங்கலோ பொங்கல், எங்கும் தமிழ் எதிலும் தமிழ், இந்திய மண்ணில் இருந்து, முருகயர்ந்து வந்த முதுவாய் வேல், திருமணத் திருவிழா, வண்ணமலர்ப் பந்தலிலே, நீலவான் நிலவிலே, தாமரை பூத்த தடாகத்திலே, அனுராதபுரத்திலே, மக்கள் மங்கலங்கள், கண்ணகி விழா, நாச்சியார் பார்த்த நாட்டுக்கூத்து, மருதம் மணக்கின்றது, கொக்கட்டியிலே ஒரு கோயில், மங்களம் சுப மங்களம் ஆகிய இயல்களால் ஆக்கப்பட்டுள்ளது. சிறந்த நல்ல கவிதைகளால் ஆன சுவைமிக்கதொரு காவியம் இது. வாகரைவாணன் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் ஓய்வுபெற்ற தமிழாசிரியராவார். சந்தியாப்பிள்ளை அரியரெத்தினம் எனும் முழுப்பெயரை இயற்பெயராய்க் கொண்டவர் தமிழ்நிதி வாகரைவாணன். இவர் ‘சுதந்திரன்’ துணை ஆசிரியராகவும், கொழும்பு-10, பண்டாரநாயக்கா மாவத்தையில் அமைந்திருந்த சுதந்திரன் அச்சகம் வெளியிட்ட ‘சுடர்’ மாதாந்த சஞ்சிகையின் துணை ஆசிரியராகவும் விளங்கியவர். மட்டக்களப்பிலிருந்து 1998-2008 காலப்பகுதியில் சுமார் பத்து வருடங்கள் வெளிவந்த ‘போது’ எனும் மாதாந்தச் சிற்றிதழின் ஆசிரியரும் கூட. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 19213).