வி.ஜீவகுமாரன். சென்னை 600109: Umi –Unique Media integrators, இல 8, ஆறாவது குறுக்கு, 8ஆவது பிரதான சாலை, வைஷ்ணவி நகர், திருமுல்லைவாயில், 1வது பதிப்பு, மார்ச் 2017. (சென்னை: மணி ஓப்செட்).
xxvi, 246 பக்கம், விலை: இந்திய ரூபா 225., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-85471-78-0.
ஈழத்தமிழரின் ஆறு தலைமுறைகளினூடாக சமூக மாற்றத்தினை மிருதுவாக வெளிப்படுத்தும் சமூக வரலாற்று ஆவணப்பதிவாக இந்நாவல் அமைந்துள்ளது. மரணத்தை அண்மித்த ஒருவனது வாழ்வு குறித்ததான சாட்சியமாக முக்காலத்திலும் பயணிக்கும் ஒரு கதைசொல்லியின் பார்வையில் நனவிடை தோய்தலாக கதை சொல்லப்படுகின்றது. சொந்த ஊர் வாழ்வையும் புலம்பெயர் வாழ்வையும் களங்;களாகக் கொண்டு, தமது பாரம்பரியப் பெருமைகளென்று கருதியிருந்த ஒரு வாழ்வுமுறையின் கரடுமுரடான தோல் உதிர்க்கப்படுதலும், புதிய மென்மையான தோலின் உருவாக்கமும், உதிர்ந்தும் உதிராதிருக்கும் விகாரங்களும் வாழ்வுக்கான பல்வேறு தருணங்களில் எவ்வாறு நிகழ்கின்றன என்பதை ஒரு சமூக வரலாற்றுப் பார்வையில் இந்நாவல் அலசுகின்றது. 1958 மற்றும் 1983 இனக்கலவரங்கள், விடுதலை இயக்கங்களின் தோற்றம், வளர்ப்பு மகளாகக் குடும்பத்தில் உரிமைபெற்ற பபிதா என்ற சிங்களப் பெண் விடுதலை இயக்கத்தில் சேருதல் போன்ற விடயங்களும் நாவலோட்டத்தில் பதிவாகின்றன. யாழ்ப்பாணத்துச் சமூக மாற்றம் தொடர்பான புதிய புரிதல்கள் குதிரை வாகனத்தின் மூலம் சாத்தியமாகின்றது. குடும்பம் கௌரவம் என்று முரண்பட்டிருக்கும் நம்மவரின் வாழ்க்கை முறை, திருவிழா நிகழ்வுகள், சாதிப் பிரிவினைகள், இனப்பிரிவினைகள், இதனால் ஏற்படும் குடும்பப் பிளவுகள், இராணுவ அடக்குமுறை, விடுதலை இயக்கங்களில் சேருதல், புலம்பெயர்தல், இளம் சந்ததியின் புலம்பெயர்ந்த வாழ்க்கையில் எத்துணை கட்டுடைப்பு உண்டோ அத்தனையையும் ஜீவகுமாரன் இந்நாவலில் பதிவுசெய்திருக்கிறார்.