எஸ்.ஏ.உதயன். மன்னார்: சைபர் சிற்றி, பேராலயச் சந்தி, பெற்றா, 1வது பதிப்பு, 2013. (மன்னார்: சைபர் சிற்றி, பேராலயச் சந்தி).
xii, 13-135 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-52958-2-6.
கடற்கரையில் ஒதுங்கும் அதிக முட்களை ஒரு தொகுதியாகக் கொண்டதும் சங்குவடிவத்தில் அமைந்ததுமான கடல்தாவரத்தின் முள் சங்குமுள் எனப்படுகின்றது. இந்நாவல் யுத்த அனர்த்தத்தின் வடுக்களையும் அதன் பின்னான கலாசார மீறல்களையும் சொல்கின்றது. யுத்த நடவடிக்கையின் முறைகேடுகளையும், இருதரப்பினதும் மீறல்களையும் நாசூக்காகச் சொல்லமுனைகின்றது. அவ்வப்போது கதைப்போக்கின் சுவைகருதி நாட்டார் பாடல் வரிகளையும் சேர்த்திருப்பதும், பொருத்தமான உவமான உவமேயங்களைக் கையாள்வதும் நாவலைச் சுவைமிக்கதாக்குகின்றன. போருக்குப் பின்னரான மீள்குடியேற்றக் கிராமங்களில் தமிழ் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளின் மூலத்தை மற்றுமொரு கோணத்தில் உதயன் சொல்லியிருக்கிறார். மன்னார், பேசாலையைச் சேர்ந்த எஸ்.ஏ.உதயன் அரங்கியல் கலை, எழுத்துக்கலை, கட்புலக்கலை என கவின்கலைகளில் கால் பரப்பி தன் பதிவுகளை ஆழமாகவும் விசாலமாகவும் இட்டுவருபவர். மண்மணம் வீசும் நாவல்களை புனைவதில் மன்னார் மண்ணில், சிறந்து ஒளிவீசுகிறார். இவர் இதுவரை 6 நாவல்களை தமிழ்கூறும் நல்லுலகிற்குத் தந்துள்ளதோடு அவற்றுக்காகப் பல விருதுகளையும் பெற்றுள்ளார். பவன சுந்தரம்பாள் தமிழியல் விருதை இருமுறையும், வடமாகாண சிறந்த நூல் எனும் விருதை நான்கு முறையும், இலங்கை இலக்கிய பேரவை விருதை ஒரு முறையும், இலங்கை அரச சாகித்திய விருதினை இரு முறையும், கொடகே தேசிய சாகித்திய விருதை ஒருமுறையும் இதுவரை பெற்று சாகித்திய நாயகனாகத் திகழ்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61276).