நா.யோகேந்திரநாதன். கிளிநொச்சி: பேரிகை சமூக கலை இலக்கிய அவை, 3வது பதிப்பு, மார்ச் 2016, முன்னைய பதிப்பு விபரங்கள் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ரூபன் அச்சகம்).
xxiii, 455 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-955-42746-0-0.
இந்நூல் யதார்த்த பூர்வமாக போராட்டத்தை ஏற்றுக் கொண்ட மக்களின் உணர்வலைகளையும், விடுதலைப் போராட்டத்தின் பக்கம் இருக்கக் கூடிய நியாயங்கள், மக்களின் பண்பு, இடம்பெயர் அவலங்கள், போராட்டத்தின் விளைவாக ஏற்பட்ட துன்பங்கள் இவை அனைத்தையும் சித்தரிக்கின்றது. சாதாரண மானுட வாழ்வில் ஏற்படக் கூடிய அன்பு, பாசம், காதல் என்ற பல விடயங்களையும் உண்மைச் சம்பவங்களுடனும், கிராமிய வாழ்க்கை முறைகளில் காணப்படக்கூடிய சிறப்பியல்புகளையும் தொகுத்து உருவாக்கப்பட்டுள்ளது. மிக நீண்ட காலம் வானொலித் துறையில் பணியாற்றி ஒலிபரப்புத் துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவரும் வானொலிப் பிரதி எழுதுதல், வானொலி நிகழ்ச்சிகள் தயாரித்தல் என பல்வேறு அனுபவங்களைக் கொண்டவரும் சிறந்த சிறுகதை எழுத்தாளர், நாவல் ஆசிரியர், அரசியல் ஆய்வுக் கட்டுரையாளர் என பல்துறைத் தேர்ச்சி பெற்றவர் திரு.நா.யோகேந்திரநாதன். போராட்ட வரலாற்றின் பல உண்மைச் சம்பவங்கள், போராட்ட செயற்பாடுகளினால் கலங்கித் துடித்த மக்களின் குமுறல்களையும், அதனோடிணைந்த இன்னும் பல செய்திகளையும் மிக அழகாக கோர்வை செய்து நாவலாக எமக்குத் தந்திருப்பது போராட்ட வரலாற்றின் நேரான முகத்தை எமக்குக் காட்டுவதாக அமைந்துள்ளது. எமது இளைஞர் யுவதிகளின் உணர்வலைகளையும் மக்கள் பால் அவர்கள் கொண்டிருந்த அதீத பாசம், பற்றுக்களையும், சுதந்திர காற்றை சுவாசிப்பதற்காக மேற்கொண்ட உச்ச முயற்சிகளையும் எமது எதிர்கால சந்ததிக்கு எடுத்துச் செல்லக் கூடிய பெறுமதி வாய்ந்த ஆவணங்களாக அமைகின்றன. இந் நூல் போராட்டங்கள் பற்றிய பதிவுகளையும் மற்றும் அதனுடன் இணைந்த நிகழ்வுகளையும் மட்டும் கோடிட்டுக்காட்டாது இந் நிகழ்வுகளுக்கும் மேலாக எமது பூர்வீகக் கிராமங்கள், இயற்கை வனப்புக்கள், அவை கொண்டிருக்கக் கூடிய சிறப்பியல்புகள் மற்றும் இப் பகுதியில் வாழ்ந்த எமது முதியவர்கள் கொண்டிருந்த அனுபவங்கள், அவர்களின் வனம் சார்ந்த அறிவுத் திறன்கள் ஆகிய பல இயற்கையோடொத்த அனுபவப் பகிர்வுகளையும் இங்கே பதிவுசெய்யப்பட்டுள்ளது. அகில இலங்கை ரீதியில் மும்மொழிகளிலும் நடத்தப்பட்ட நாவல் இலக்கியப் போட்டியில் தேசிய இலக்கிய விருது பெற்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61280).