கந்தமுருகஞானி (இயற்பெயர்: முருகேசு ராஜவரோதயம்). யாழ்ப்பாணம்: முருகேசு ராஜவரோதயம், ஆனந்த கானம், ஆவரங்கால், புத்தூர், 1வது பதிப்பு, மார்ச் 2014. (உடுப்பிட்டி: ஆகாயம் பதிப்பகம், இமையாணன் கிழக்கு).
xviii, 135 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4900-02-8.
யாழ்ப்பாணத்தில் வடமராட்சிப் பகுதியில் அல்வாய்; கிராமத்தின் வடபகுதியில் பாழடைந்த நிலையில் காணப்படும் 200ஆண்டுப் பழமைமிக்க வேதக்கோயில் பற்றிய வரலாறே இங்கு நாவலாகப் புனைவுபெறுகின்றது. 1910இல் இவ்விடத்திலிருந்து தேவாலயம் அகற்றப்பட்டு சற்கோட்டை கடற்கரைப்பகுதியில் அமைத்ததன் பின்னர் இவ்வாலயத்துக்கு பழைய வேதக்கோயில் என்ற பெயர் வழங்கப்படலாயிற்று. இந்த நாவலின் முதலாம் பாகம் போர்த்துக்கீசர் காலப்பகுதியில் நடந்த சம்பவங்களாக அமைகின்றது. இரண்டாம், மூன்றாம் பாகங்கள் முறையே ஒல்லாந்தர், ஆங்;கிலேயர் ஆட்சிக் கால வரலாற்றுப் புனைவாக உருவாக்கப்படவுள்ள செய்தியும் முன்னுரையில் சொல்லப்படுகின்றது. மிகக் குறைந்தளவு வரலாற்றுத் தரவுகளை வைத்துக் கொண்டு நம்பகத்தன்மை வாய்ந்த ஒரு புனைவை அச்சுவேலி தோப்பு அருள்நந்தி பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றும் ஆசிரியர் தனது கன்னிப் படைப்பாகப் படைத்துள்ளார். நாவலின் நம்பகத்தன்மைக்கு, அந்தப் பிரதேசம் பற்றிய புவியியல், பண்பாட்டு அம்சங்கள் தொடர்பான கதாசிரியரின் நேரடி அனுபவங்கள், பெற்றோர் மற்றும் உறவினர் ஊடாகப் பெற்ற வாய்மொழித் தகவல்கள், நுணுக்கமான விபரிப்புகள் என்பன காரணமாகின்றன.
நாவலில் விபரிக்கப்பெறும் அந்நியர் ஆட்சி, வேற்றுப் படைகளின் அட்டகாசம், இடப் பெயர்வு போன்றவை நமதுமண்ணில் நாம் இன்றும் அனுபவித்து உணர்ந்தவை. இக்கதையை நடுநிலையோடும் சமூகங்களிடையே பிரிவுகளை ஏற்படுத்தாதவாறும் இன நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையிலும் சித்திரித்துள்ளார். பள்ளர் சுடுகாடு, கூத்தாடும் பற்றை, கற்கோட்டை(சக்கோட்டை) போன்ற இடப் பெயர்கள் வந்தமைக்கான காரணங்களைக் கதையோடு கதையாக நகர்த்திச் செல்கிறார்.