கௌரி அனந்தன். சென்னை 600094: பூவரசி பப்ளிக்கேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2016, (சென்னை 600094: பூவரசி பப்ளிக்கேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு).
xiii, 116 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 21×14 சமீ., ISBN: 978-93-81322-49-9.
‘பெயரிலி’ ஒரு வெகுஜன இலக்கியத்திற்கான தன்மையினையும், பல்வேறு புதிய உத்திமுறைகள் மற்றும் முற்போக்கான கருத்தியலைக் கொண்ட தீவிர இலக்கிய வகைமை எனும் இருவேறு தன்மையினையும் உள்ளடக்கியதாக அமையப்பெற்றுள்ளது. மேலும் வாழ்வியல் குறித்த மதிப்பீடுகளும் நிகழ்வுகளும், பாத்திரச் செயல்பாடுகளும் அடுத்து இன்னவாக இருக்கும் என்று வாசகனால் தீர்மானிக்க முடியாதபடியான புதிர்தன்மையை கொண்டிருப்பதும் புனைவாக்கத்தின் வெற்றியாகவே பார்க்க முடிகிறது. அழகிய ஒரு காதல் கதையை மாய எதார்த்தத் தன்மையோடு இந்நாவல் பேசியிருக்கிறது. வருண், ஜானு வழியாக நகரும் கதை நாடுவிட்டு நாடு பயணித்து இலங்கையில் மையம் கொண்டு அங்கேயே நிறைவடைகிறது. தாய்நாட்டின் மீதான விருப்பம், விவசாயத்தின் மீதான நாட்டம் எனக் கதை தமிழ்ப் பாரம்பரியத்தைத் தேடிப் பயணிக்கிறது. அதற்கு மாயாவாதமும் விறுவிறுப்பும் சிறப்பாகவே கைகொடுத்துள்ளது. ஒரு துப்பறியும் நாவலை வாசித்த அனுபவம். அடுத்த என்ன? என்னும் எதிர்பார்ப்பை ஒவ்வொரு அத்தியாயத்திற்குள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு அடியிலும் ஏற்படுத்தி நகரும் நாவல் அங்கங்கே ஆசிரியரின் மதிப்பீடுகளையும் விமர்சனங்களையும் விதைத்துச் செல்கிறது. உணவு தான் மனிதனை உயிர்வாழ வைக்கும். இரும்புகளால் அதைச் செய்யமுடியாது. விவசாயிதான் மானிடத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் காலக்கோட்டில் தன்னைத் தனித்துவமாகக் காட்டிச்செல்வான் என்ற கருத்தை உறுதிசெய்யும் நாவல் இது. கௌரி அனந்தன், இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். தற்போது கொழும்பிலும் சிங்கப்பூரிலும் வசித்துவருகிறார். கலைத்துறையில் ஈடுபாடு கொண்ட இவர் கனவுகளைத் தேடி என்ற நாவலை நவம்பர் 2015இல் வெளியிட்டவர். இது இவரது இரண்டாவது நாவல். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61297).