ந.சி.கந்தையாபிள்ளை. சென்னை: ஒற்றுமை ஆபீஸ், தியாகராய நகர், 1வது பதிப்பு, வைகாசி 1941. (சென்னை: ரோயல் பிரின்டிங் வேர்க்ஸ், மவுண்ட் ரோட்),
94 பக்கம், விலை: இந்திய ரூபா 12., அளவு: 18×12 சமீ.
அகநானூறு அகத்திணை சார்ந்த நூல் என்பதுடன் இதில் நானூறு பாடல்கள் அடங்கியுள்ளதால் இது அகநானூறு என வழங்கப்படுகிறது. இது பல்வேறு புலவர்கள் வெவ்வேறு காலங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும். இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் மிகக் குறைந்த அளவாகப் 13 அடிகளையும், கூடிய அளவு 31 அடிகளையும் கொண்டு அமைந்துள்ளன. அகத்தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்டமையால் இதனை, ‘நெடுந்தொகை’ என்றும் கூறுவர். இத் தொகையைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார். இத் தொகை பாடிய புலவர்கள் நூற்று நாற்பத்தைவர். அகநானூற்றுப் புலவர்கள் 146 பேர். அவர்களுள் 65 பேர் அகநானூற்றில் மட்டுமே பாடல் பாடியுள்ளார்கள். கடவுள் வாழ்த்துச் செய்யுளைத் தவிர்த்து இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன.இவை களிற்றியானை நிரை(1-120), மணி மிடை பவளம் (121-300), நித்திலக் கோவை (301-400) என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ந.சி.கந்தையாபிள்ளை அவர்கள்; நித்திலக்கோவையை தனியாகப் பிரித்தெடுத்து அதனை வசனநடையில் தருகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 0608).